தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இந்தியாவில், தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து இரண்டாவது அலையாக கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து தற்பொழுது நாளொன்றுக்கு சுமார் 36,000 என்ற அளவிற்கு புதிய தொற்றுகள் பதிவாகி வருகின்றன. தமிழ்நாட்டில் 21.05.2021ஆம் நாள் கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 2.74 லட்சமாக உள்ளது.
தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, கடந்த 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், 09.05.2021 அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலும், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், 13.05.2021அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும், கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இது மட்டுமன்றி, 14.05.2021 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் நோய்ப் பரவலைத் தடுக்க 15.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
மேலும், கடந்த 20.05.2021, 21.05.2021 ஆகிய நாட்களில், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கரோனா நோய்த் தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, நோய்த் தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
தமிழ்நாட்டில் கரேனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், புதிதாக கரோனா நோய்த் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுவதோடு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் மருத்துவமனைகளிலும், கரோனா தடுப்பு மையங்களிலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன் வழங்குவதற்கும் அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நம் மாநிலத்தில், நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய்த் தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக, இன்று (22.05.2021), அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைத்து, ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நோய்த் தொற்றுப் பரவலைக் குறைக்க முடியும் என்பதால், ஏற்கெனவே 13.05.2021 அன்று மக்கள் பிரநிதிகளான சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தி, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழு ஒன்றை இந்த அரசு அமைத்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (22.05.2021) இந்தக் குழுவுடன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கலந்து ஆலோசித்தபோது, அவர்கள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற வகையில், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளின்படியும், தற்போது 10.05.2021 காலை 04.00 மணி முதல் 24.05.2021 காலை 04.00 மணி முடிய அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
· இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
· மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள்.
· பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம்.
· பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
· தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்.
· தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
· மின்னணு சேவை காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை இயங்கலாம்.
· உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் ((e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்
· பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்
· ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
· வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
· சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
· உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
· மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
· செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
· தடையின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
பொது
· பொதுமக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
· மால்கள் திறந்திட அனுமதி கிடையாது.
· வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago