முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் கட்சியை விட்டு நீக்கம்; பணமோசடி புகார் காரணமா?- ஆதரவாளர்கள் கருத்து

By ந. சரவணன்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் மீது எழுந்த பணமோசடி குறித்த புகாரைத் தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியின் தலைவராக இருந்த டாக்டர் நிலோபர் கபீல் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து, அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான அம்பூர்பேட்டை கே.பிரகாசம் (47) என்பவர் அமைச்சர் நிலோபர் கபீலின் தனி உதவியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நிலோபர் கபீலுக்கு நடந்து முடிந்த (2021) சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தலைமை ‘சீட்’ வழங்கவில்லை.

இது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு வணிகவரித்துறை அமைச்சரும், ஜோலார்பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளருமான கே.சி.வீரமணிதான் காரணம் என நிலோபர் கபீல் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும், அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணியும் ‘மாமன்-மச்சான்’ போல பழகி வருவதாகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அமைச்சர் கே.சி.வீரமணி வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சீட் பெற்றுத் தந்ததாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது அக்கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த தேர்தலில் வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றிக்குத் தேர்தல் பணியாற்றுவேன் எனக்கூறிய நிலோபர் கபீல் தேர்தல் பிரச்சாரத்தில் பெரிதாகப் பங்கேற்கவில்லை என அக்கட்சியினரே கூறி வந்தனர். இதற்கிடையே, தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபீல் பதவி வகித்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நிறையப் பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான பணத்தைத் தனது உதவியாளரான பிரகாசம் மூலம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் பணமோசடி செய்ததாகவும், அரசு வேலைக்காகப் பணத்தை இழந்தவர்கள் அமைச்சரின் உதவியாளர் பிரகாசத்திடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுத் தொந்தரவு செய்து வருவதாகவும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 10 பக்கங்கள் அடங்கிய புகார் மனு ஒன்றை கடந்த 3-ம் தேதி பிரகாசம் வழங்கினார்.

இந்தத் தகவல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் கட்சியின் கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீலைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று அறிக்கை வெளியிட்டனர்.

அமைச்சரின் உதவியாளரே டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர் மீது பணமோசடி குறித்து புகார் அளித்திருப்பதும், அதன்பேரில் முன்னாள் அமைச்சர் கட்சியை விட்டு நீக்கியிருக்கும் இச்சம்பவம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி காரணமா ?

ஜோலார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாகக் களம் இறங்கிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுவோம் என நினைத்தார். காரணம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக பொறுப்பாளர் தேவராஜ் வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும், ஜோலார்பேட்டை தொகுதிக்குத் தொடர்பில்லாதவர் என்பதாலும் அமைச்சர் கே.சி.வீரமணியின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாக கே.சி.வீரமணியின் ஆதரவாளர்களும், அதிமுகவினரும் கூறி வந்தனர்.

இந்நிலையில், நிலோபர் கபீலுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதற்குக் காரணம் அமைச்சர் கே.சி.வீரமணிதான் என நிலோபர் கபீல் குற்றம் சாட்டி, தனது ஆதரவை திமுக வேட்பாளர் தேவராஜுக்கு மறைமுகமாக வழங்கியதாகவும், அதனால் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அதிமுகவினர் கூறி வந்தனர்.

இதனால், கோபமடைந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, நிலோபர் கபீலின் தனி உதவியாளர் பிரகாசத்தைத் தூண்டி நிலோபர் கபீல் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வைத்து, அவரைக் கட்சியை விட்டே நீக்கச் செய்ததாகவும், இதைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் நிலோபர் கபீலின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்