ஸ்டெர்லைட் போராட்டம்; பொதுமக்கள் மீதான வழக்குகள் வாபஸ்; கைதான 93 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட குறிப்பிட்ட வழக்குகளைத் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அச்சமயத்தில் கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்குக் காயம், மன உளைச்சல் ஏற்பட்டதைக் கருதி நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில், இந்தப் போராட்டம் குறித்துக் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், தேவையற்ற வழக்குகளைத் திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டது.

மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

1. இந்தச் சம்பவம் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்றப் புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

2. 22.05.2018 அன்று நடந்த சம்பவத்திற்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

3. காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்குக் காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி, அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில், 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

4. ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இப்போராட்டத்தின்போது தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்