ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் மதுரைக்கு வந்த 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன்  

ஒடிசா மாநிலத்தில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரிகள் ரயில்கள் மூலம் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் வாங்கிவருகிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு அவை ரயில் மூலம் தென் மாவட்டங்களுக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இருதினங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ரயில் இன்று திண்டுக்கல் ரயில்நிலையம் வழியாக மதுரை சென்றது.

ஒரு ரயிலில் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொள்ளவு கொண்ட 5 டேங்கர் லாரிகள் இந்த சிறப்பு ரயிலில் கொண்டுசெல்லப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில்நிலையத்தில் ரயில்களில் இருந்து டேங்கர் லாரிகள் இறக்கப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை அரசு தலைமை மருத்துவமனை, திண்டுக்கல் அரசு மருத்துவமனை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பால் அதிகமாக தீவிர சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் உள்ள மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை அனுப்பிவைத்தனர்.

இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட கரோனா பாதிப்பு அதிகம் உள்ள தென் மாவட்டத்தில் கரோனா தொற்றால் தீவிர சிகிச்சை பெறுவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE