தமிழ்நாட்டுக்குக் குறைந்தபட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மே 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் சவாலான சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், திமுக பல்வேறு பணிகளை அதிவேகத்துடன் மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. ஆனால், இதற்காக மத்திய அரசு வெறும் 13.85 லட்சம் ஊசிகளையே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது.
எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேற்று (மே 20) மாலை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கு உடனடியாக குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினை அளித்தார்.
மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல். நிறுவனம் ரூபாய் 750 கோடியில் ஊசி தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளது. ஆனால், தற்சமயம் இந்த ஆலை தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடாமல் உள்ளது. இங்கு கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய கூடுதலாக ரூபாய் 300 கோடி முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தடுப்பூசி தேவையைக் கருத்தில்கொண்டு உடனடியாக ஹெச்.எல்.எல். ஆலையில் கூடுதல் முதலீடு செய்திடத் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் அளித்திடும்போது, வயது 18 முதல் 44 வயது உடையோருக்கான ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதத்திற்கான தடுப்பூசிகளின் எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு 11 லட்சத்து 51 ஆயிரத்து 760 ஆக இருக்கும் எனவும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூன் மாதத்திற்காக 6 லட்சத்து 55 ஆயிரத்து 330 (ஜூன் மாதம் முதல் 15 நாட்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைப்போலவே, ஜூன் மாதம் இரண்டு மற்றும் மூன்றாவது வாரங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், செங்கல்பட்டில் அமைந்துள்ள ஹெச்.எல்.எல். தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையைப் புனரமைக்கும் பணியைத் துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் பூர்வாங்கமாக நல்ல முடிவினை மத்திய அரசு மேற்கொள்ளும் என, தமிழக முதல்வரிடம் தெரிவிக்குமாறு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதி அளித்துடன், தமிழக முதல்வருக்கு தனது நல்வாழ்த்துகளையும் தெரிவிக்குமாறு டி.ஆர்.பாலுவிடம் கூறினார்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago