கரூர் பேருந்து நிலையத்தில் காய்கறி வியாபாரம் செய்யும் தரைக்கடை வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை

கரூர் பேருந்து நிலையத்தில் காய்கறி வியாபாரம் செய்யும் தரைக்கடை வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது.

கரூர் உழவர் சந்தைக்கு வெளியே தரைக்கடைகள் அமைத்து, வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவர்களுக்கு கரூர் பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 18-ம் தேதி முதல் தரைக்கடை வியாபாரிகள் கரூர் பேருந்து நிலையத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இங்கு வந்து காய்கறி வாங்கி செல்கின்றனர்.

கரூர் பேருந்து நிலைய தரைக்கடை வியாபாரிகள் மூலம் யாருக்கும் கரோனா பரவிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, கரூர் பேருந்து நிலையத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் தரைக்கடை வியாபாரிகளுக்கு கரூர் கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ அலுவலர் திவ்யா தலைமையில், கரூர் பேருந்து நிலையத்தில் கரோனா பரிசோதனை முகாம் இன்று (மே 20) நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையத்தில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகள், மினி பேருந்து நிலைய காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் என, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE