செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (மே 19) வெளியிட்ட அறிக்கை:
"சென்னையை அடுத்த செங்கல்பட்டு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அரசுக் கட்டமைப்பைத் தனியாரிடம் தாரை வார்ப்பது நியாயமற்றது.
நோயற்ற இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன், தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை செங்கல்பட்டில் அமைக்க 2004 - 09 காலத்தில் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தீர்மானிக்கப்பட்டது. அதற்காக ரூ.594 கோடி நிதியும் அப்போதே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான முக்கியக் காரணம் அரசுக்குத் தேவையான தடுப்பூசிகளை இனி தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கக் கூடாது; மாறாக அரசே தடுப்பூசிகளைக் குறைந்த விலையில் அதிக தரத்துடன் தயாரிக்க வேண்டும் என்பதுதான்.
ஆனாலும், எனக்குப் பிறகு வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்கள், இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டாததால் திட்டப் பணிகள் முடங்கின. ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்கா அமைப்பதற்கான பணிகளில் 90% நிறைவடைந்துவிட்டன.
இன்னும் சில நூறு கோடிகள் முதலீடு செய்தால், அங்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் எனும் நிலையில், உடனடியாகத் தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்; இல்லாவிட்டால் தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தேன்.
இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகளின் மருத்துவத்துறை அமைச்சர்களுக்கு ஒருசில நாட்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாத நிலையில், தடுப்பூசி வளாகத்தை அமைத்த மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ஹெச்.எல்.எல் பயோடெக், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைத் தனியார் நிறுவனங்களோ, பிற அரசுத்துறை நிறுவனங்களோ 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது.
ஒப்பந்தப் புள்ளிகளைத் தாக்கல் செய்வதற்கு நாளை மறுநாள் (மே 21) கடைசி நாள் எனும் நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காக தடுப்பூசி வளாகத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஏலத்தில் எடுக்க தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் தனியாருக்கு வழங்கப்பட்டால், எந்த நோக்கத்திற்காக அது அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்துவிடும்.
உலகிலேயே அதிக தடுப்பூசி தேவைப்படும் நாடு இந்தியாதான். இந்தியாவில் கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க அடுத்த 6 மாதங்களில் 100 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். இதற்கு 200 கோடி டோஸ்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை சுமார் 20 கோடி பேருக்கு மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இன்னும் 180 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
இவற்றுக்காக தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருப்பது, கால விரயமும், பொருள் விரயமும் ஏற்படுத்தும் செயலாகும். மாறாக, பொதுநலன் கருதி தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான காப்புரிமையை அரசே எடுத்துக்கொண்டு அரசு நிறுவனங்களில் தடுப்பூசிகளைத் தயாரிப்பதுதான் சிறந்த தீர்வாகும்.
அந்த வகையில், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் அல்லது தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மாறாக, தனியார் நிறுவனத்திடம் ஆலையை ஒப்படைப்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.
செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற யோசனையைத் தமிழக அரசு பரிசீலிக்கத் தயங்குவதும், தனியாரிடம் இருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதும் ஏன்? எனப் புரியவில்லை.
தமிழ்நாடு அரசு தனியாரிடமிருந்து மூன்றரை கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது. இவற்றை ஜூலை மாதத்தில் தொடங்கி, டிசம்பர் மாதத்திற்குள் விநியோகிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
இதற்கான டெண்டர் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட, இதற்காக குறைந்தது ரூ.1,500 கோடி செலவாகக்கூடும். இந்தத் தொகையைக் கொண்டு செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, தனியாரிடம் வாங்க திட்டமிட்டிருப்பதை விடப் பல மடங்கு தடுப்பூசிகளைத் தயாரித்துவிட முடியும்.
செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் அடுத்த 3 மாதங்களில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க முடியும் என்பதாலும், மாதத்திற்கு 5 கோடிக்கும் கூடுதலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்பதாலும், தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை விடக் கூடுதலான தடுப்பூசிகளை 4 மாதங்களில் தயாரித்து விட முடியும்.
தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளைத் தயாரிக்க முன்வரும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்திக்கொள்வதற்காகப் பல கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசு தயார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதற்காக முதலீடு செய்யும் நிதியை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை எடுத்து நடத்துவதற்காகச் செலவிடுவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.
மீண்டும் சொல்கிறேன். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அரசிடம்தான் இருக்க வேண்டும். அது தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடும்.
ஒவ்வொரு ஆண்டும் 2.9 கோடி கருவுற்ற பெண்களுக்கும், 2.67 கோடி சிசுக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்திற்கு (Universal Immunization Programme - UIP) தேவையான 7 தடுப்பூசிகளையும் இந்த வளாகத்தில் தயாரிக்க முடியும், இவ்வளாகம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டால், இந்தத் தடுப்பூசிகளைத் தனியாரிடமிருந்துதான் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அது பெரும் அநீதி ஆகும். அது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்.
சென்னை கிண்டியில் தமிழக அரசுக்குச் சொந்தமாகத் தடுப்பூசி தயாரிக்கும் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் இருப்பதைப் போல, செங்கல்பட்டு வளாகமும், தமிழக அரசின் இரண்டாவது தடுப்பூசி உற்பத்தி வளாகமாகச் செயல்படலாம்.
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைந்துள்ள 100 ஏக்கர் நிலத்தை தமிழக அரசுதான் மத்திய அரசுக்கு வழங்கியது என்பதால், அதில் தமிழக அரசுக்குக் கூடுதல் உரிமை உள்ளது. எனவே, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தைத் தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்துவிட்டு, அந்த வளாகத்தைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இது தொடர்பாக, தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பாமக உறுதியாகத் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago