கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ரெம்டெசிவிர் மருந்து உயிர்காக்கும் மருந்து அல்ல என்று சொல்லப்பட்ட பிறகும் அதற்காக நாட்கணக்கில் கால் கடுக்க மக்கள் காத்திருந்ததை யாராலும் மறக்க முடியாது.
அதேபோல ஆவி பிடித்தால் கரோனா தொற்றைத் தடுக்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் காவலர்களே ஆவி பிடித்தனர். ஆவி பிடிப்பதை இயக்கமாக மாற்றும் முயற்சிகளும் நடந்த நிலையில், பொது இடங்களில் ஆவி பிடிக்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் ஆவி பிடித்தலில் உள்ள நன்மை, தீமைகள் என்ன? ஆவி பிடிப்பதற்குப் பதிலாக கோவிட் தொற்றாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து சிவகங்கை பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 'இந்து தமிழ்' இணையதள வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
’’கரோனா வைரஸ், தொற்றாளர்களின் சுவாசப் பாதையில் சில நாட்கள் இருந்த பிறகே, அவர்களுக்கு அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். அப்போது மிகவும் குறைவான அளவிலேயே சுவாசப் பாதையின் மேல் பகுதியில் வைரஸ் இருக்கும். அந்த நிலையிலேயே ஆவி பிடிக்கும்போது வைரஸின் அளவைக் குறைக்க முடியுமா, தொற்று அடுத்த கட்டத்திற்குச் செல்லாமல் தடுக்க முடியுமா என்று பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது போதிய அளவில் பலனளிக்கவில்லை. பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் எதுவும் ஆறுதலான முடிவை அளிக்கவில்லை. கரோனா முதல் அலையைப் பொறுத்தவரை எல்லாமே சோதனை முறையில் செய்யப்பட்டவைதான். இப்போதுதான் ஆவி பிடித்தலில் பெரிதாகப் பலன் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல ஆவி பிடித்தலை 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 20 நிமிடங்கள் அதற்குரிய வழிமுறைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலானோர் அதை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.
கரோனா தொற்று லேசான (Mild) நிலையில் இருந்து மிதமானதாக (Moderate) மாறும் நிலையை யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது. கரோனா வைரஸால் உடலுக்கு உள்ளே நிமோனியா உருவான பிறகுதான் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படும். அவ்வாறு நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நுரையீரலில், சூடாக ஆவி பிடிக்கும்போது நன்மையை விடத் தீமையே ஏற்பட வாய்ப்பு அதிகம். ஏற்கெனவே உள் காயங்கள் ஏற்பட்டிருக்கும் சுவாசப் பாதை, சூடான காற்றால் மேலும் பாதிக்கப்படலாம்.
ஆவி பிடித்தலால் எந்த நன்மையுமே இல்லையா?
சாதாரண சளி, மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினைகளை வேது பிடிப்பது குணமாக்கலாம். ஆனால், இதுவும் தனிப்பட்ட வகையில் சொல்லப்படுவதுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பொது இடங்களில் நீராவி பிடிப்பது ஆபத்தானது. ஆவி பிடிக்க ஒரே கருவியைப் பல்வேறு நபர்கள் பயன்படுத்தும்போது, அதில் ஒருவருக்கு கரோனா இருந்தால் மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புகள் உண்டு.
பொது இடங்களில் முகக்கவசத்தை கழற்றக் கூடாது என்றும் நாம்தான் சொல்கிறோம். ஆனால், ஆவி பிடிப்பதற்காகக் கவசத்தைக் கழற்ற வேண்டியிருக்கிறது. அதேபோல ஆவி பிடிக்கும்போது பெரும்பாலானோருக்குத் தும்மல், இருமல், சளி வரும். அங்கே கரோனா தொற்றாளர்கள் இருந்து அவருக்கு இருமல், தும்மல் வந்தால், சுற்றி இருக்கும் காற்றில் கோவிட் வைரஸ் பரவி தொற்று ஏற்படும்.
சித்த மருத்துவ சிகிச்சையில் ஆவி பிடிக்கப்படுகிறதே?
சித்த மருத்துவ கரோனா மையங்களில் ஆவி பிடிப்பது சிகிச்சையாக மேற்கொள்ளப்பட்டாலும், அவர்கள் சிகிச்சைக்குத் தனித்தனிப் பானைகளையே பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். அதேபோல அவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனியாகப் பிரித்து சிகிச்சை அளிப்பதால் தொற்று பரவும் அபாயம் இல்லை.
மேலும் சித்த மருத்துவத்தில் லேசான கரோனா அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாத நபர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர். தொற்று மிதமான நிலைக்கு மாறும்போது அவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர். மிதமான (Moderate) அறிகுறி கொண்ட நோயாளிகளுக்கு நீராவி பிடிக்கும் முறை கிடையாது. அவர்களுக்கு ஸ்டீராய்டு, ஹெப்பாரின் உள்ளிட்ட மருந்துகளும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளும், ஆக்சிஜனுமே அளிக்கப்படுகின்றன. சிகிச்சை இல்லாவிட்டால் மிதமான (Moderate) அறிகுறி கொண்ட நோயாளிகள், தீவிரமான (Severe) கரோனா கொண்டவர்களாக மாறும் அபாயம் உண்டு.
ஆவி பிடித்தலால் குழந்தைகளுக்கு அபாயம் ஏற்படுமா?
ஆவி பிடிக்கும் முறையை இயக்கமாக மாற்றும் அளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அப்படிச் செய்துவிட்டால் மிதமான கரோனா தொற்றோடு இருப்பவர்கள் தீவிர நிலையை அடைந்த பிறகே மருத்துவமனைக்கு வரும் சாத்தியக் கூறுகள் உண்டு. அதுவரையில் வீட்டிலேயே இருந்து ஆவி பிடித்துக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இப்போது சிலர் குழந்தைகளுக்கும் ஆவி பிடிப்பதைக் கேள்விப்பட முடிகிறது. அதில் வெந்நீரில் சூட மாத்திரை, யூகலிப்டஸ் போன்றவற்றைப் போட்டு ஆவி பிடிக்க வைப்பதால் குழந்தைகளுக்கு ஃபிட்ஸ் வரவும் வாய்ப்புண்டு என்று குழந்தை நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நீராவி பிடித்தலுக்குப் பதிலாகத் தொற்றாளர்கள் என்ன செய்யலாம்?
கரோனா தொற்றாளர்களில் 100இல் 80 பேருக்கு லேசான கரோனாதான் ஏற்படுகிறது. அவர்கள் வீட்டிலேயே ஆவி பிடித்துக்கொண்டு பிற அறிகுறிகளைக் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. அதன்மூலம் லேசான கரோனாவில் இருப்பவர்கள் மிதமான கரோனாவுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதுதான் இதிலுள்ள அச்சமே.
எனவே கரோனா தொற்றாளர்கள் தங்களைத் தாங்களே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, காய்ச்சல், இருமல், ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நாம் அடுத்த நிலைக்குச் செல்கிறோமோ, இல்லையா என்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்தாலே போதும்.
100-க்கு 20 பேர் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்வர். தொற்றாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், காய்ச்சல் உள்ளதா, இருமல் தொடர்ந்து வருகிறதா, ஆக்சிஜன் அளவு 94க்குக் கீழே குறைகிறதா, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறதா, ஒரு நிமிடத்திற்கு 24 முறைக்கு மேல் மூச்சு விடுகிறார்களா போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும். இத்தகைய அறிகுறிகள் தீவிரமாகும்போது உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றால் உயிரிழப்பைக் கட்டாயம் தடுக்க முடியும்’’.
இவ்வாறு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago