பாரத் பயோடெக் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலினிடம் முத்தரசன் நேரில் கோரிக்கை

By செய்திப்பிரிவு

பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்றுச் செயல்படுத்தினால் சாதனைப் பட்டியலில் சிகரமாக அமையும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி ஆகியோர் இன்று (17.05.2021) தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் ஒரு கோரிக்கை மனுவை ஸ்டாலினிடம் அளித்தனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

"கரோனா நோய்த்தொற்றுப் பரவல் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. தற்போது நோய்த்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

நம்பிக்கையூட்டும் நடவடிக்கை

கடந்த ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், தாங்கள் தொடங்கிய கரோனா நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை, தற்போது தமிழ்நாடு அரசின் முதல்வராக தீவிரமாக முன்னெடுத்து வருவது, குறிப்பாக, தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து, மக்களுக்கு வழங்கும் முயற்சி பெரும் நம்பிக்கையளிக்கிறது.

நோய்த்தொற்று தாக்கலில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், தேவையான தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்படுகிறது.

தடுப்பு மருந்து உற்பத்தி வளாகம்

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசால் கட்டப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்துவது குறித்துப் பரிசீலிப்பது நல்ல பயனளிக்கும் என உறுதிபட நம்புகிறோம்.

2012ஆம் ஆண்டில் திமுக பங்கு வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசின் திட்டத்தில் கட்டப்பட்ட, 58 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் உற்பத்தி திறன் கொண்ட, பாரத் பயோடெக் நிறுவனத்தை நேரில் பார்வையிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்கள் அது உலகத்தரத்துடன் அமைந்திருப்பதாகச் சான்றளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும்

மத்திய அரசின் செலவில் கட்டப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தை தற்போதைய பாஜக அரசு தனியாருக்கு விற்று விடுவதாக அறிவித்துள்ளது. இதற்கான முறையில் நிபந்தனைகளைத் தளர்த்தி வருகிறது.

இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசு எடுத்து, மாநில அரசின் பொதுத் துறையாக ஏற்று, அதில், தடுப்பு மருத்துகள் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்குறிப்பிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்றுச் செயல்படுத்தினால் சாதனைப் பட்டியலில் சிகரமாக அமையும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

இதுகுறித்து, முதல்வர், தக்க முறையில் பரிசீலித்து, உரிய முடிவுகள் எடுத்து, தடுப்பு மருத்து உற்பத்தியில் சாதனை படைக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்