8 ஆண்டுகளுக்குப் பிறகுத் திறப்புவிழா: சிங்கம்புணரி அருகே தயாராகும் சமத்துவபுரம் வீடுகள்

By இ.ஜெகநாதன்

சிங்கம்புணரி அருகே கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் வீணாகி வந்த சமத்துவபுரம் வீடுகள், 8 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட உள்ளன.

திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகம் முழுவதும் அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன. அதன்படி, சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி வேங்கைப்பட்டியில் 2010-ம் ஆண்டு சமத்துவபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.1.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தெடங்கப்பட்டன. அங்கு ரேஷன் கடை, தார்ச் சாலை, குடிநீர்த் தொட்டி, தெருவிளக்கு வசதிகளுடன் 100 வீடுகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடையாத நிலையில் 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்துக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

அதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தலை அடுத்து மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2012-ம் ஆண்டு முழுமை அடைந்தன. கடந்த 2016-ம் ஆண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் சமத்துவபுரம் திறக்கவில்லை. இதனால் வீடுகள் பழுதடைந்து வீணாகி வந்தன.

சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி வேங்கைப்பட்டியில் உள்ள சமத்துவபுரம் வீடுகள்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால், சமத்துவபுரம் வீடுகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ளநிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவபுரம் வீடுகளைத் திறக்க ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதையடுத்து முட்புதர்களாக இருந்த சமத்துவபுரத்தைச் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி உள்ளன. இதனால் வீடுகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பிறகே பயனாளிகளுக்கு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE