மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கரோனா பரவல் தடுப்பு கள ஆய்வு பணி மற்றும் தடுப்பு மருந்து தொகுப்பு வழங்கும் பணி ஆகியவற்றின் தொடக்க விழா, திருச்சி மாநகராட்சி 45-வது வார்டு இளங்காட்டு மாரியம்மன் கோயில் அருகே இன்று (மே 16) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் எஸ் திவ்யதர்ஷினி, சட்டப்பேரவையின் திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ் ஆகியோர் முன்னிலையில், மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இந்தப் பணிகளைத் தொடக்கி வைத்தனர்.
அப்போது, அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
"திருச்சி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் மற்றும் கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் தேவையான அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. இது குறித்து, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். மாவட்ட ஆட்சியரும் பல்வேறு அதிகாரிகளுடன் பேசி வருகிறார். திருச்சி மாவட்டத்துக்குத் தேவையான ஆக்சிஜனை கொண்டு வந்து, மக்களைக் காப்பாற்றும் பணியை அலுவலர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் பெல் நிறுவனத்துக்குச் சென்று ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர வேண்டும் என்று கோரினோம். அதற்கு, நாங்களே வெளியில் இருந்துதான் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். எனவே, ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க வாய்ப்பு இல்லை என்றனர்.
ஆனால், நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மக்களைக் காப்பாற்ற ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். இதை ஏற்று ஒரு மாதத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக பெல் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவையுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காத நிலையில், ஓரிரு நாட்கள் அவர்களைப் பாதுகாக்க பயன்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகருக்கு 30 அல்லது 40 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மட்டுமே வழங்கப்படவுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டு திருச்சிக்கு 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளேன்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி பேசுகையில், "திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 100-க்கும் அதிகமாக கரோனா நோயாளிகள் உள்ள 35 வார்டுகளில், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் வீடுதோறும் கள ஆய்வில் ஈடுபடவுள்ளனர்.
களப் பணியாளர்களின் ஆய்வின்போது கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்குச் செல்ல அறிவுறுத்துவர்.
இதனிடையே, கரோனா தொற்று குறைவாக கண்டறியப்படுபவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு காத்திருக்காமல், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, கரோனா தொற்று குறைவாக கண்டறியப்படுபவர்களுக்கு முகக்கவசம் ஜிங்க் மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் கபசுர சூரண பொடி ஆகியவை அடங்கிய தடுப்பு மருந்து தொகுப்பு வழங்கப்படும்.
இதன்மூலம், கரோனா தொற்றை தொடக்க நிலையிலேயே குணப்படுத்தவும் அல்லது கரோனா தொற்று தீவிரமான நிலையை அடையாமலும் தடுக்க முடியும். வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்களை களப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் அளிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனைகளும், தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளும் செய்யப்படும்" என்றார்.
தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் 300 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago