டெல்டா பாசனத்துக்காகத் தண்ணீர்; 5 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

By வ.செந்தில்குமார்

டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து தஞ்சையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர், சேண்பாக்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மே.15) தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘மேட்டூர் அணையில் 92 அடியில் தண்ணீர் இருந்தாலே பாசனத்திற்காகத் திறக்கலாம். ஆனால், தற்போது 97 அடிக்குத் தண்ணீர் உள்ளது. மேட்டூரில் தண்ணீர் திறந்தால்தான் டெல்டா பாசன விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். எனவே தென்மேற்குப் பருவமழை மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரைத் திறப்பது குறித்து நாளை (மே.16) தஞ்சாவூரில் 5 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இங்கு கூடப் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் நிற்கிறீர்கள். மக்கள் 5 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் காய்ச்சல் காரணமாக நான் கீழே விழுந்தேன். மருத்துவமனை சென்று பரிசோதித்தபோது எனக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. எப்படி வந்தது என்றே தெரியவில்லை. ஆனால் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பினேன்.

அரசு விழாக்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை வரவேற்பது போன்ற விளம்பரப் பலகைகள் வைப்பது, சால்வைகள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதைக் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE