மக்களின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில், வீட்டுத் தனிமையில் இருப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. ரெம்டெசிவிர் மருந்து தேவையும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இதில் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சிக்கிக் கைதாகின்றனர். இதுகுறித்து திடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால் அவ்வாறு பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும், இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.
எளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதே நேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.
தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு எனத் தமிழக அரசு தொய்வின்றித் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago