ஊரடங்கைக் கண்காணிக்க மேலும் 15 குழுக்கள்: 30 குழுக்களாக உயர்த்தியது சென்னை மாநகராட்சி

By செய்திப்பிரிவு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும், அவசியக் காரணங்களின்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது, 10 மணிக்கு மேல் திறந்திருக்கும் கடைகளுக்கு அபராதம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளன. இவற்றைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு அத்திவாசிய சேவைகளைத் தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நடைமுறைப்படுத்த மண்டலத்திற்கு 5 நபர்கள் அடங்கிய ஒரு குழு என மொத்தம் 15 மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுக்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இக்குழுவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் உரிமம் ஆய்வாளர் என இரண்டு நபர்கள், காவல்துறையின் சார்பில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் என இரண்டு நபர்கள் மற்றும் சென்னை மாவட்ட வருவாய்த் துறையின் சார்பில் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் ஒருவர் என மொத்தம் 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டங்களில் அரசு அறிவித்துள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநகராட்சி, சென்னை அம்மா கூட்டரங்கில், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருடன் இணைந்து அமைக்கப்பட்ட மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுவினருக்கு (Zonal Enforcement Team) சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், ஆகியோர் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், ஊரடங்கு அமலாக்கக் குழுவினர் தங்கள் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொடர்ந்து அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாத கடைகளை மூடி சீல் வைக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, ஏப்ரல் 09 2021 முதல் இதுநாள்வரை அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத நபர்களிடமிருந்து ரூ.1,34,46,390 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுவின் மூலம் மட்டும் மே.06 முதல் இதுநாள் வரை ரூ.21 லட்சத்து 21,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல. அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த மக்கள் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எனவே, மண்டலத்திற்கு ஒரு ஊரடங்கு அமலாக்கக் குழு என 15 மண்டலங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை மேலும் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக மண்டலத்திற்கு ஒரு குழு என மேலும் 15 ஊரடங்கு அமலாக்கக் குழுக்கள் இன்று முதல் செயல்படுத்தப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் செந்தில்குமார், (வடக்கு), என்.கண்ணன், (தெற்கு) அவர்கள், இணை ஆணையர் (கல்வி) சங்கர்லால் குமாவத், துணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஜெ.மேகநாத ரெட்டி, துணை ஆணையாளர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஷ், வருவாய் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்".

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்