கரோனா தடுப்புப் பணிக்கு ரூ.1 கோடி நிதியுதவி: முதல்வர் ஸ்டாலினிடம் சவுந்தர்யா ரஜினிகாந்த் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தினர் கரோனா தடுப்புப் பணிக்கு 1 கோடி ரூபாயை நிதியுதவியாக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கரோனா பேரிடரை ஒட்டி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கரோனா பேரிடர்க் காலத்தில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்டிபிசிஆர் கிட்டுகள், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என முதல்வர் உறுதியளித்திருந்தார்.

மேற்கூறிய நடவடிக்கைகளுக்காகப் பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகப் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து திரையுலகினர், தொழிலதிபர்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பலர் அரசுக்கு நன்கொடையை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தினர் கரோனா தடுப்புப் பணிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நிதியுதவியாக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர்.

இது தொடர்பாக சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறும்போது, ''என்னுடைய மாமனார் எஸ்.எஸ்.வணங்காமுடி, கணவர் விசாகன், அவரின் சகோதரி மற்றும் நான் அனைவரும் இன்று காலை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து முதலமைச்சருக்கான கரோனா நிவாரண நிதியை ஜிங்கோவிட் மருந்து தயாரிப்பு நிறுவனமான அபெக்ஸ் லெபாரட்டரீஸ் மூலம் வழங்கினோம்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE