தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை குறைத்திடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ரூ.30-க்கும் குறைவான அடக்கவிலை கொண்ட பெட்ரோலையும், டீசலையும் சராசரியாக ரூ.90-க்கும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது எந்த வகையிலும் நியாயமல்ல, எரிபொருள் விலைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்க அவற்றின் மீதான வரிகளைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் நடப்பு மாதத்தில் எட்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடிக் கொண்டு இருக்கும் நிலையில், அதை உணராமல் எரிபொருள் விலைகளை உயர்த்துவது சிறிதும் நியாயமற்றது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.93.84 ஆக உள்ளது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.87.49 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 92.43 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 85. 75 ஆகவும் இருந்தன.

அதன்பின் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி இன்று வரையிலான 11 நாட்களில் மொத்தம் 8 முறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. மே மூன்றாம் தேதி மட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் தலா 8 காசுகள் குறைக்கப்பட்டன. இம்மாதத்தில் மட்டும் 8 நாட்களில் பெட்ரோல் விலை 1.41 ரூபாயும், டீசல் விலை 1.74 ரூபாயும் அதிகரித்திருக்கின்றன.

2021-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வருகின்றன. ஜனவரி மாதம் முதல் தேதியில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரும்பான்மையான நாட்களில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில நாட்கள் விலைக் குறைப்பு செய்யப்பட்டது.

அதனால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், மே மாதத் தொடக்கத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இன்று வரை பெட்ரோல் விலை 7.33 ரூபாயும், டீசல் விலை 8.28 ரூபாயும் அதிகரித்திருக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அத்துடன் நின்று விடாது. எரிபொருள் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். பொது மக்களின் போக்குவரத்து செலவும் அதிகரிக்கும். இவற்றை ஏழை - நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏற்கனவே வாழ்வாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டு வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்படுவார்கள்.

பெட்ரோல், டீசல் விலைகள் மீது மத்திய, மாநில அரசுகள் மிக அதிக அளவில் வரிகளை விதிப்பது தான் விலை உயர்வுக்கு காரணமாகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 31.80 ரூபாயும் கலால் வரியாக மத்திய அரசு வசூலிக்கிறது. தமிழக அரசு அதன் பங்குக்கு பெட்ரோல் விலை மீது 34 விழுக்காடும், அதாவது ஒரு லிட்டருக்கு ரூ.23.80, டீசல் விலை மீது 25 விழுக்காடும், அதாவது 17.75 ரூபாயும் மதிப்பு கூட்டு வரியாக வசூலிக்கிறது.

ரூ. 30 க்கும் குறைவான அடக்கவிலை கொண்ட பெட்ரோலையும், டீசலையும் சராசரியாக ரூ.90-க்கும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது எந்த வகையிலும் நியாயமல்ல. எரிபொருள் விலைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்க அவற்றின் மீதான வரிகளைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இது அவசரத் தேவை.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில்,‘‘ திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும்; சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சரியான நேரம் இது தான். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதால் தமிழக அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு எதுவும் ஏற்பட்டு விடாது.

மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி, மத்திய அரசின் கலால் வரியில் மாநில அரசின் பங்கு ஆகியவற்றைச் சேர்த்து தமிழக அரசுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 37.61 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 31.10 ரூபாயும் வருவாயாக கிடைக்கிறது. இதில் முறையே ரூ.5, ரூ.4 குறைப்பது பாதிப்பை ஏற்படுத்திவிடாது.

அதுமட்டுமின்றி கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.20 -க்கும் கூடுதலாக உயர்ந்துள்ளன. அதன் மூலமாக மட்டுமே தமிழக அரசுக்கு லிட்டருக்கு ரூ.5-க்கும் அதிகமாக கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும். அதனால் தமிழக அரசு வருவாய்ப் பற்றாக்குறை என்று காரணம் கூறாமல் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும்.

மத்திய அரசும் கலால் வரியை அதே அளவுக்கு குறைக்க வேண்டும். தமிழக அரசு கூடுதலாக சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும். அதன்மூலம் மக்கள் சுமையை ஓரளவாவது குறைக்க முன்வர வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்