செங்கல்பட்டு தடுப்பூசி மையம் பணியை விரைவுப்படுத்துக: மத்திய அமைச்சருக்கு அன்புமணி கடிதம் 

By செய்திப்பிரிவு

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்குவதை விட அரசே தயாரிப்பது தான் சிறப்பானதாக இருக்கும், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் மீதமுள்ள பணிகளை முடிக்கவும், கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது:

சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு, வணக்கம்

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் கரோனா பரவலை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி தடுப்பூசி தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் 18 வயதுக்கும் மேற்பட்ட 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது இமாலயப் பணியாகும். தேவையான அளவு தடுப்பூசிகளின் இருப்பு, விலை ஆகியவை தான் நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். தனியார் நிறுவனங்களிடமிருந்து கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது அரசுக்கு மிகப்பெரிய செலவை ஏற்படுத்தும்.

கரோனா வைரஸ் பரவல் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் என்னவென்றால், பொது சுகாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கான ஒரே வழி பொது சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்பது தான். அதன்படி, மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, தற்கால சூழலுக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி, போதிய எண்ணிக்கையில் மருத்துவப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.

அதே நேரத்தில் இந்தியா கடைபிடித்து வரும் அனைவருக்கும் தடுப்பூசி திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இத்தகைய அசாதாரண சூழல்களை சமாளிக்க அரசால் நடத்தப்படும் தடுப்பூசி உற்பத்தி மையங்களை நாம் உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு நகரில், மத்திய அரசின் துணை நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி அன்று தங்களுக்கு நான் எழுதிய கடிதம் குறித்து நினைவூட்ட விரும்புகிறேன்.

உங்களின் ஆய்வுக்காக அந்தக் கடிதத்தையும் இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடித்து உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்வது சாத்தியம் தான். உலகத் தரம் வாய்ந்த செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து வளாகத்தில் கீழ்க்கண்ட 7 வகையான தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். அவற்றின் விவரம் வருமாறு:

1. திரவ பெண்டாவேலண்ட் தடுப்பூசி ( Liquid Pentavalent Vaccine (LPV))

2. ஹெபடைடிஸ் - பி தடுப்பூசி ( Hepatitis-B-Vaccine )

3. ஹீமோபிலஸ் இன்புளுயன்சா - பி தடுப்பூசி ( Haemophilus Influenza Type B)

4. ரேபிஸ் தடுப்பூசி ( Rabies Vaccine)

5. மூளைக்காய்ச்சல் தடுப்பூசி ( Japanese Encephalitis E Vaccine)

6. பிசிஜி தடுப்பூசி ( BCG Vaccine)

7. தட்டம்மை - தாளம்மை (எம்.எம்.ஆர்) தடுப்பூசி ( Measles & Rubella Vaccine)

ஆகியவற்றை இந்த வளாகத்தில் தயாரிக்க முடியும்.

இன்னும் ஒரு நற்செய்தி என்னவென்றால், கரோனா தடுப்பூசிகளையும் இந்த வளாகத்தில் தயாரிக்க முடியும் என்பது தான். இத்தகைய சிறப்பு கொண்ட தடுப்பூசி வளாகத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, இதை கூட்டாண்மை நிறுவனமாக நடத்தலாம்.

கரோனா வைரஸ் பரவல் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்றும், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலத்திற்கு கரோனா மக்களை பாதிக்கும் என்றும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு தடுப்பூசி தான் கரோனாவை தடுப்பதற்கான சிறந்த ஆயுதம் ஆகும். அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்குவதை அரசே தயாரிப்பது தான் சிறப்பானதாக இருக்கும்.

எனவே, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் மீதமுள்ள பணிகளை முடிக்கவும், கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்