கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு என, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 12) புதிதாக பதவியேற்ற சபாநாயகர் அப்பாவு-வை வாழ்த்திப் பேசியதாவது:
"சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைப் பெற்று திமுக ஆட்சி அமைக்க ஆதரவுக் கரம் நீட்டிய தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தலைவர் கருணாநிதியை வணங்கி என்னுடைய உரையை நான் தொடங்குகிறேன்.
தாங்கள் இந்த இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது என் நெஞ்சம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எந்த அளவுக்கு தாங்கள் உணர்ச்சிமயமாக இப்போது அமர்ந்திருக்கிறீர்களோ, அதைவிட அதிகமாக நான் உணர்ச்சியும், பெருமையும், பூரிப்பும் அடைந்துகொண்டிருக்கிறேன்.
அனைத்து தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் கம்பீரமாக உட்கார்ந்து, பல்வேறு விவாதங்களில் பங்கெடுத்து, கருத்தோடும், சுவையோடும் பேசக்கூடிய தங்களது விவாதங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கக்கூடியவன் நான்.
அந்தவகையில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்குப் புகழ்பெற்ற ஜனநாயக மன்றமாக விளங்கிக்கொண்டிருக்கக்கூடிய இந்த சட்டப்பேரவையின் சபாநாயகராக தாங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமை அளிக்கின்றது.
கதர் ஆடையில் நீங்கள் உள்ளீர்கள். தூய்மையின் அடையாளமாக, வெள்ளை உள்ளத்தின் அடையாளமாக இந்த பேரவையின் உறுப்பினர்களுக்கு எல்லாம் நீங்கள் இன்றைக்கு காட்சி தந்துகொண்டிருக்கிறீர்கள். இந்த பேரவையில் சபாநாயகர்களாக இருந்த அனைவரும் இந்த அவைக்குப் பல்வேறு பெருமைகளைச் சேர்த்து தந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்களே அதிகமாக சபாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள்.
எஸ்.செல்லப்பாண்டியன், சி.பா.ஆதித்தனார், பி.ஹெச்.பாண்டியன், மு.தமிழ்க்குடிமகன், சேடப்பட்டி இரா. முத்தையா, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், கா.காளிமுத்து, இரா.ஆவுடையப்பன். தற்போது தாங்கள் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இந்தப் பேரவையை ஜனநாயக மாண்புடன் நடத்திடும் திறமை படைத்தவர்களாக சபாநாயகர்கள் இருந்திருக்கிறார்கள். தாங்களும் இந்தப் பேரவையை ஜனநாயக ரீதியில், அந்த மரபு வழி நின்று நிச்சயம் நடத்துவீர்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு. ஆனால், அதில் கர்வமோ, ஆணவமோ இருக்காது. ஜனநாயகமும், மரபுகளும் நிச்சயமாக அதிலே இருக்கும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆணவம் இருக்காது; கர்வம் இருக்காது. ஜனநாயகம்தான் இருக்கும். மரபுகளும் கடைப்பிடிக்கப்படும்.
தோல்வியில் துவள்வதும், வெற்றியில் இறுமாப்பு கொள்வதும் எங்களுடைய வழக்கமல்ல. அப்படி எங்களுடைய தலைவர் கருணாநிதி எங்களை வளர்க்கவும் இல்லை. ஆகவே, தமிழக மக்கள் அளித்திருக்கக்கூடிய இந்த மாபெரும் வெற்றி, எங்களை மேலும் மேலும் அடக்கமுள்ளவர்களாக ஆக்கி இருக்கிறது. கட்டுப்பாடோடு இருப்பதோ, அடக்கத்தோடு இருப்பதோ சட்டப்பேரவையின் ஜனநாயகத்தைக் காப்பாற்றிடவே. அதை எந்தவிதத்திலும் பலவீனமாக யாரும் கருதிடக் கூடாது.
இவை அனைத்தையும் அறிந்த தாங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பேதம் பார்க்காமல், அனைவருக்கும் பொதுவானவராக இருந்து, பழம்பெருமை வாய்ந்த மிகத் தொன்மையான இந்த அவையை அதற்குரிய மாண்புடன் நடத்திடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, இங்கிருக்கக்கூடிய அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நிச்சயமாக இருக்கும்.
பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியையும் மனமார நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
இந்த நேரத்தில் தனிப்பட்ட எனக்குள்ள ஒரு வருத்தம், அவைத் தலைவர் ஆனதன் மூலமாக தங்களது அரசியல் பணிகளை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழல் இப்போது எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
கட்சிப் பணி செய்ய முடியாமல் போகிறதே என்ற வருத்தம் எனது உள்ளத்தில் ஒரு ஓரத்தில் இருந்தாலும் இந்த இடத்துக்கு பொருத்தமானவர் தாங்கள்தான் என்பதை எண்ணி அந்த வகையிலே நான் மனநிறைவு அடைகிறேன்.
நாம் அனைவரும் சேர்ந்து நமக்கும் நாட்டு மக்களுக்குமான நல்லதோர் எதிர்காலத்தை அமைக்க இந்தச் சட்டப்பேரவை ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாப்போம்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago