கட்டுப்பாடில்லாமல் மக்கள் நடமாட்டம்; ஊரடங்கு நடைமுறையில் உள்ளதா?- ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

''ஊரடங்கைக் கடுமையாகச் செயல்படுத்தினால் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்குமோ? என்று அரசு அஞ்சக் கூடாது. மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஒரு நல்ல காரியத்திற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் தவறில்லை. எனவே, தமிழகத்தில் இனிவரும் நாட்களில் ஊரடங்கை அரசு கடுமையாக செயல்படுத்த வேண்டும்'' என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 3 நாட்களாக முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால், சாலைகளில் வாகனங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடமாட்டம் தடையின்றி தொடர்வதைப் பார்க்கும்போது, எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

தலைநகர் சென்னையில் எந்த நேரம் பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒருசில நிமிடங்களில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்வதையும், இருசக்கர வாகனங்களில் பலரும் பறப்பதையும் பார்க்க முடிகிறது. தமிழகத்தின் அனைத்து மாநகர, நகர, கிராமப்புறங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. ஊரடங்கு என்ற பெயரில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.

ஆனால், சாலைகளிலும், தெருக்களிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் நடமாட்டம் நீடிக்கிறது. அவர்களில் பலரும் முகக்கவசம் கூட அணியாமல் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். சாலைகளைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதா? என்ற வினா மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்த பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டதன் நோக்கமே, அவற்றுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க வேண்டும்; அதன் மூலம் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுத்து, கரோனா பரவல் சங்கிலியை அறுத்தெறிய வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது ஊரடங்கு மதிக்கப்படும் விதத்தைப் பார்க்கும்போது கரோனா பரவல் சங்கிலியைத் துண்டிக்க முடியாது.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு வெற்றி பெறுவதும், அதன் மூலம் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படுவதும் பொதுமக்களாகிய நமது கைகளில்தான் உள்ளது. சுதந்திரம், தனி நபர் உரிமைகளைத் திகட்டத் திகட்ட அனுபவித்த நம்மால் வீட்டுக்குள் அடங்கி இருப்பது சிரமம்தான்.

ஆனால், நமது உயிரையும், மற்றவர்களின் உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ள இதைத் தவிர வேறு வழியில்லை. ஊரடங்கு என்பது கரோனாவை ஒழிப்பதற்கான கசப்பு மருந்தாகும். சுயநலன் கருதியும், பொதுநலன் கருதியும் இக்கட்டுப்பாடுகளை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், தினமும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் மிகவும் கவலையளிக்கின்றன. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஒன்றே முக்கால் லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் சுமார் 30,000 பேர் கரோனா நோயால் பாதிக்கப்படுகின்றனர். தினமும் உயிரிழப்போரின் எண்ணிக்கை 300-ஐத் தொட்டுவிட்டது.

நமது கண் முன்னால் நேற்று வரை நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர்கள் இன்று உயிரிழக்கும் துயரம் தமிழ்நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பவர்கள் கூட 24 மணி நேரத்தில் உயிரிழக்கும் கொடுமை நடக்கிறது. இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு சுடுகாடுகளில் பல மணி நேரம் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

நோயால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கொடுமைகளை தினமும் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவ்வளவுக்குப் பிறகும் எந்தப் பொறுப்புமின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் ஆபத்தை விலைக்கு வாங்குவதாகவே பொருள்.

கரோனா ஆபத்திலிருந்து தப்பவும், தொற்றுப் பரவலைத் தடுக்கவும் அனைவரும் வீடுகளில் அடங்கி இருப்பதுதான் ஒரே தீர்வு. எனவே ஊரடங்கை மக்கள் மதித்து நடக்க வேண்டும். வீடுகளை விட்டு எவரும் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்; வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வெளியில் சென்று வரும்போது கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

இவற்றை விட முக்கியம் தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். முழு ஊரடங்கைப் பிறப்பித்ததுடன் கடமை முடிவடைந்ததாக நினைத்து ஒதுங்கிவிடக் கூடாது. நண்பகல் 12 மணிக்கு மேல் மருத்துவத் தேவை, அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு எதற்காகவும், எவரும் சாலைகளில் நடமாட வேண்டிய அவசியம் இல்லை.

அந்த நேரத்தில் சாலைகளில் செல்பவர்கள் எதற்காகச் செல்கின்றனர்? அவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளனவா? என்பதைக் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும். ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள். ஊரடங்கை கடுமையாகச் செயல்படுத்தினால் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்குமோ? என்று அரசு அஞ்சக் கூடாது.

மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஒரு நல்ல காரியத்திற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் தவறில்லை. எனவே, தமிழகத்தில் இனிவரும் நாட்களில் ஊரடங்கை அரசு கடுமையாகச் செயல்படுத்த வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்