கரோனா தடுப்புப் பணியில் மோடியின் நிர்வாகம் பொய்த்துவிட்டது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

By அ.முன்னடியான்

கரோனா தடுப்புப் பணியில் ஒட்டுமொத்தமாக பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் பொய்த்துவிட்டது எனப் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நாரயணசாமி இன்று (மே 11 கூறியதாவது:

‘‘கடந்த ஒரு மாதமாக கரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து, தற்போது அது உச்சநிலையில் இருக்கிறது.

காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு புதுச்சேரியில் இருந்த சமயத்தில் 2 மாதங்கள் முழு ஊரடங்கைக் கொண்டுவந்து கரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

மக்களுக்கு நிவாரணம் வழங்கி, கரோனா அதிகரிப்பு குறைக்கப்பட்டது. இப்போது கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கரோனா அதிகமாகப் பரவி வருகிறது. முன்பு இருந்ததைவிட 3 பங்கு அதிகமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் எடுக்கப்பட்ட உமிழ்நீர் பரிசோதனையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் மக்கள்தொகை அடிப்படையில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் அகில இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. இது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாக இருக்கிறது. இந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அரசின் சார்பில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆக்சிஜன் அளவு 98-ல் இருந்து 70 வரை வரும் நபர்களைக் கண்டிப்பாகக் காப்பாற்ற முடியாது. அதற்குக் காரணம் புதுச்சேரியில் இவ்வளவு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும் வென்டிலேட்டர்கள் கொண்ட ஐசியூ படுக்கைகள் புதுச்சேரியில் அதிக அளவில் இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 16க்கு மேல் இல்லை. அதுபோல் மற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் குறைவாக உள்ளது.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் நடமாட்டம் சகஜமாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு ரூ.500, 1,000 என்று அபராதம் போடுவது மட்டும் தீர்வாகாது. மக்களுக்கு விழிப்புணர்வும், கரோனாவின் விளைவைத் தெளிவாகவும் எடுத்துக்கூற வேண்டும்.

தடுப்பூசி போடுவது குறைந்து வருகிறது. தடுப்பூசியால் மட்டும்தான் கரோனாவை விரட்டி அடிக்க முடியும். புதுச்சேரி மாநிலத்தில் 2 லட்சம் பேருக்கு மட்டும்தான் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 14 லட்சம் மக்கள்தொகையில் 2 லட்சம் பேருக்கு மட்டும் போட்டால் கரோனா தொற்று போகாது. இதற்குத் தேவையான மருந்துகளையும், தடுப்பூசிகளையும் வாங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்று, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் திரும்ப வேண்டுமென நான் இறைவனை வேண்டுகிறேன்.

இதற்கிடையே துணைநிலை ஆளுநர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அமைப்பினர், ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் கரோனாவைத் தடுக்க முடியும். தற்போது களப்பணியில் யாரும் இருப்பதில்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கண்காணிப்பதில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்வதில்லை. இவையெல்லாம் முடுக்கி விடப்படவில்லை என்றால் கரோனா தொற்று புதுச்சேரி மாநிலத்தை முழுமையாக சுடுகாடாக்கிவிடும்.

மக்கள் எவ்வளவு அவதிப்படுகிறார்கள் என்று பல மாநிலங்களில் நாம் பார்க்கிறோம். இறந்தவர்கள் உடலை எரிக்க விறகுகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வருகின்றன. மயானங்களில் உடல்களை எரிக்கக் காத்துக் கொண்டிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் பொய்த்துவிட்டது. அவர் திறமை இல்லாதவர் என்பதை மக்கள் மத்தியில் நிரூபித்து வருகிறார். பேசுவதால் மட்டும் அவர் மக்களை ஏமாற்றிவிட முடியாது. பணி செய்ய வேண்டும்.

ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்கவில்லை. தடுப்பூசிக்கான மருந்துகள், வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள், தேவையான உபகரணங்கள் இல்லை. தனியார் மருத்துவமனைகள் அதிக அளவு பணம் வசூல் செய்து ஏழை மக்களை வஞ்சிக்கின்றனர். இப்படி இந்திய நாடு சுகாதாரத் துறையில் தோல்வியுற்றுள்ளது. இதற்கு முழுப் பொறுப்பையும் பிரதமர் ஏற்க வேண்டும். அவர் கூறியவை அனைத்தும் பொய்த்து அவலநிலை நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம், மக்கள்தொகை வெகுவாக பாதிக்கப்படும். சுகாதாரத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும். வேலை வாய்ப்பில்லாமல் வீட்டில் முடங்கியுள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

வங்கிகளில் வாங்கிய கடனுக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். இப்படிப் பல கடமைகள் மத்திய அரசுக்கும், மோடிக்கும் இருக்கிறது. இதனை விட்டுவிட்டு தேர்தல் பிரச்சாரம், ஆட்சிக் கவிழ்ப்பு, பாஜக இல்லாத மாநிலங்களுக்குத் தொல்லை கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்துகொண்டு நிர்வாகத்தை கோட்டைவிட்டுவிட்டார். ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடியின் அமைச்சரவை கரோனா தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.’’

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்