கோவையில் மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜனுக்குத் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதால், ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கையில் இடம் கிடைப்பதற்காக ஆம்புலன்ஸ்களிலேயே நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு கரோனா பாதிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. தேவைக்கேற்க அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டிருந்தாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரைவிட, தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளதால், படுக்கை வசதிகள் பாதிப்புக்கு ஏற்ப போதுமானதாக இல்லை.
நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக கோவை வருவதால் தொடர்ந்து தேவை இருந்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கையில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கோவை அரசு மருத்துவமனையில் இன்று (மே.11) காலை முதல் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் தொடர்ந்து பல மணி நேரம் காத்திருந்தனர். அதில், சூலூர் பகுதியில் இருந்து மூச்சுத்திணறல் பிரச்சினையுடன் அழைத்துவரப்பட்ட 86 வயது முதியவருக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் இடம் கிடைக்காத நிலையில் அவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார்.
கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே நாள் முழுவதும் நோயாளிகளுடன் நின்றிருந்ததால், மற்ற பகுதிகளில் உள்ள நோயாளிகளை வீட்டில் இருந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பல நோயாளிகள் தங்கள் சொந்த வாகனங்களில் நேற்று மருத்துவமனைகளுக்குச் சென்றனர். இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தொடர்ந்து நிரம்பிய நிலையிலேயே உள்ளன.
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, “ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் என மொத்தம் 717 படுக்கைகள் கோவை அரசு மருத்துவமனையில் உள்ளன. அவை அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே இருந்ததால், புதிதாக வந்தவர்களை உடனடியாக அனுமதிக்க முடியவில்லை. இருப்பினும், இதுபோன்று வருபவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள்
பணம் செலவழித்தாலும் பரவாயில்லை. தனியார் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று எண்ணும் மக்கள் அங்கும் செல்ல முடியாத சூழல் உள்ளது. தற்போது கோவையில் 62 தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இல்லை என்று தெரிவிக்கின்றனர். இதனால், எங்கு படுக்கைகள் காலியாக உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் நோயாளிகளின் உறவினர்கள் திண்டாடி வருகின்றனர்.
பல தனியார் மருத்துவமனைகளில் முன்பணம் கட்ட சம்மதம் தெரிவிப்பவர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். மற்றவர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அங்கிருந்து இக்கட்டான சூழலில் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
ஒரு லட்சத்தைக் கடந்த பாதிப்பு
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவையில் நேற்று மட்டும் 2,650 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,722 பேர் வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். 12,664 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 4,303 பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கோவையில் இதுவரை மொத்தம் 1,00,363 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் எங்கு காலியிடம் உள்ளது என்பதை அறிந்துகொள்ள 0422-1077, 9499933870 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்” என்றனர்.
காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அனுமதிக்காவிட்டால் நடவடிக்கை
"கோவையில் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படுக்கை வசதியை தேவையானோருக்கு அளிக்கும் வகையில், கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது பலன் அளிக்கும் என நம்புகிறோம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago