பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட இணைந்து நிற்போம் என, பொறுப்பேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 07 அன்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (மே 11) கூடியது. அப்போது, தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 234 எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு பதினாறாவது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் முதல்வர் என்ற முறையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய ஒன்றியம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் கடுமையாக இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இந்தப் பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணியாகும்.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதுடன், இந்தத் தடைக்காலத்தில் பொருளாதார நெருக்கடியை அவர்கள் சமாளிக்கும் வகையில், குடும்ப அட்டைக்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகள் ஆகியவை தடையின்றிக் கிடைப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும் எனது தலைமையிலான அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.
அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகம் - பத்திரிகைத் துறையினர் எனப் பல தரப்பினரும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கின்ற பணியில் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர். சமூக நல ஆர்வலர்களும், பொதுநல அமைப்பினரும், தொழில் நிறுவனத்தாரும் மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணை நின்று உதவிக்கரம் அளித்து வருகிறார்கள்.
பதினாறாவது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில், வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாகக் களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சிப் பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.
எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிக்குச் சென்று, பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் தொகுதிகளில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ இந்த அரசின் கவனத்திற்கு விரைந்து கொண்டுவரக் கோருகிறேன். எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களைப் பாதுகாப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்.
கரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago