போலீஸாரின் மென்மையான அணுகுமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதா? - மதுரையில் தேவையின்றி வெளியில் சுற்றும் வாகனங்கள் அதிகரிப்பு

By என்.சன்னாசி

மதுரையில் தேவையின்றி வெளியில் சுற்றும் வாகனங்கள் ஊரடங்கிலும் அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பால், தொற்றுப் பரவலைத் தடுக்க, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கைத் தொடர்ந்து மே 24-ம் தேதி வரையிலும், பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கான வாகனங்கள் தவிர்த்து, பேருந்து, ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட பிற வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரிய வர்த்தகம், கார்ப்பரேட் நிறுவனங்களைத் திறக்க அனுமதியில்லை.

அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்பவர்கள் உரிய ஆவணங்களைக் காண்பித்துச் செல்கின்றனர். இவர்களைத் தவிர, தேவையின்றி யாரும் வெளியில் வரக்கூடாது, நோய்த்தொற்றைத் தடுக்க, ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும் என, அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும், அவசியமின்றி வெளியில் வாகனங்களில் வருவோர் மீது நடவடிக்கை இன்றி முடிந்தவரை தகுந்த அறிவுரைகளைக் கூறி, அவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும், வேறு வழியின்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனில் வாகனங்களைப் பறிமுதல் செய்யக்கூடாது, பதிவெண் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்துவிட்டு அனுப்புங்கள் என, காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, காவல்துறையினரும் நடந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், மதுரையில் காவல்துறையின் மென்மையான போக்கைப் பயன்படுத்தி ஏதோ ஒரு அத்தியாவசியத் தேவையைச் சொல்லி, பொதுமக்கள், இளைஞர்களில் பலர் வெளியில் வருவது அதிகரித்துள்ளது.

அதிவேக பைக் வைத்திருக்கும் இளைஞர்கள் சிலர், மதுரை பைபாஸ் ரோடு, ரிங்ரோடு, அம்மா திடல் போன்ற இடங்களில் காலை, மாலை நேரங்களில் சாகசங்களில் ஈடுபடுகின்றனர். போலீஸாரைக் கண்டால் மட்டுமே அவர்கள் நகர்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மதியம் வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டாலும், இதுபோன்ற கடைகளில் மக்கள் முண்டியடிக்கின்றனர். அவரவர் உயிர் பயத்தைக் கருத்தில் கொண்டு தேவையின்றி மக்கள் வெளியில் வருவதைத் தவிர்த்து பொதுமக்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என, காவல்துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

காவல்துறையினர் கூறுகையில், "கடந்த முறை பொது ஊரடங்கின்போது, நடவடிக்கை கடுமையாக இருந்தது. வாகனங்கள் பறிமுதல், அபராதம் வசூல் போன்றவை இருந்தன. தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்குக் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. போலீஸ் நடவடிக்கையை அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் திரித்துப் பரப்பலாம் என்ற அடிப்படையில், கரோனா நேரத்தில் பொதுமக்களிடம் மென்மையான அணுகுமுறையைக் கையாளுங்கள் என, எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம்.

இதையே சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். தனிநபர் ஒவ்வொருவருக்கும் அவரவர் உயிர் மீது பயம் வேண்டும். ஊடரங்கின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இம்முறை பொதுமக்களுக்கான தேவைகள் எளிதில் கிடைக்கும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்களில் சுற்றும் நபர்களே அதிகம். சிலர் அத்தியாவசியப் பணிக்கான ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டிக்கொண்டும் செல்கின்றனர். முடிந்தவரை தடுக்கிறோம். தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுவதை இளைஞர்கள், பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்