வெளி மாவட்ட தொலைபேசி அழைப்புகளால் திணறும் கரோனா கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வுகளை பெற முடியும். இதற்காக 044-27237107, 044-27237207 என்ற தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தினந்தோறும் 40 முதல் 50 அழைப்புகள் வருகின்றன. ‘கரோனா பரிசோதனை செய்துள்ளோம் முடிவுகளை எவ்வாறு பெறுவது?', ‘கரோனா அறிகுறிகள் உள்ளன. முடிவுகள் தெரியும் வரை என்ன மருந்துகளை எடுத்துக்கொள்வது?' என்பது போன்ற அழைப்புகள்தான் அதிகம் வருகின்றன. இதற்கு ஒரு மருத்துவரே விளக்கம் அளித்து வருகிறார்.

இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, "சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு அதிக அழைப்புகள் வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வரும் அழைப்புகளுக்கு மட்டுமே எங்களால் எளிதில் உதவ முடியும். வெளிமாவட்ட அழைப்புகளுக்கு அந்த மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணை அவர்களிடம் கொடுக்கிறோம். இல்லையேல் அந்த மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம்தான் உதவ முடியும். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு அந்தந்த மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால்தான் எளிதில் உதவியைப் பெற முடியும் என்று தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் 044-27427412 என்ற தொலைபேசி எண்ணிலும், சென்னையைச் சேர்ந்தவர்கள் 044-25243454 என்ற தொலைபேசி எண்ணிலும் கரோனா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE