வீணாகும் காய் கனிகள்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், பழைய நகராட்சி அலுவலகத்திலும் விற்க ஏற்பாடு

By கே.சுரேஷ்

காய் கனிகள் அழுகி வீணாவதால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், பழைய நகராட்சி அலுவலகம் பகுதிகளிலும் காய் கனி வியாபாரம் செய்வதற்கு புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ முத்துராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக புதுக்கோட்டை நகரில் உள்ள உழவர் சந்தையில் செயல்படும் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும், ஒருநாள் விட்டு ஒருநாள் விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கவும் சந்தையை நிர்வகித்து வரும் வேளாண் வணிகத் துறையினர் ஏற்பாடு செய்தனர்.

இதனால் தங்களது காய் கனிகள் அழுகி வீணாவதால், தினந்தோறும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனப் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ முத்துராஜாவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, உழவர் சந்தையை முத்துராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், வேளாண் வணிகத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ''உழவர் சந்தையில் தொழில் செய்துவருவோர் உழவர் சந்தை மட்டுமின்றி புதிய பேருந்து நிலையம், பழைய நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தினந்தோறும் அரசு அனுமதித்த நேரங்களில் காய் கனிகளை விற்பனை செய்யலாம். இதன், மூலம் விவசாயிகளின் காய் கனி வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படாது.

இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுப்பதோடு, கரோனா தொற்று பரவாமலும் பார்த்துக்கொள்ள முடியும். நகரில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினையானது இன்னும் ஒரு வாரத்துக்குள் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முத்துராஜா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE