வேலூர் மாவட்டத்துக்கு 7,000 கரோனா தடுப்பூசிகள் வந்தன; 2-வது தவணை போடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்க ஏற்பாடு: சுகாதாரத்துறை தகவல்

By ந. சரவணன்

வேலூர் மாவட்டத்திற்கு 7,000 கரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று வந்தடைந்தன. 2-வது தவணை போடுபவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரமாக, வேலூர் மாவட்டத்தில் கரோனா அதி தீவிரமாக பரவி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

எந்த மருத்துவமனையிலும் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. அப்படியே படுக்கை வழங்கப்பட்டாலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி கிடைப்பது அரிதாக உள்ளது.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மூச்சு விட சிரமப்பட்டு உயிருக்குப் போராடி வருபவர்களுக்கு மட்டுமே படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. நோய்த்தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு படுக்கை கிடைப்பது 'குதிரைக் கொம்பாக' உள்ளது.

சில நேரங்களில் படுக்கை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகும்போது, கரோனா நோயாளிகளை வீட்டுக்குத் திரும்பி அனுப்பும் மருத்துவர்கள், அடுத்த நாள் வாருங்கள் பார்க்கலாம் எனக்கூறுகின்றனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டு முழுமையாக நிரம்பிவிட்டதால், அவசர சிகிச்சைப்பிரிவில் தற்போது கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கும் தற்போது போதுமான படுக்கைகள் இல்லாததால் மருத்துவர்கள் திண்டாடி வருகின்றனர்.

வீரியம் மிக்க கரோனா 2-வது அலையுடன் போராடும் மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால், அடுத்த 2 வாரங்களில் நோய்ப்பரவல் அதிகரித்து பேரிழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால், கரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

அதன்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நினைப்பவர்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்ட வேண்டும். கரோனா தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை, பொதுமக்கள் எந்தவித பயமுமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 45 வயதுக்குக் குறைவானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் 5,000 தடுப்பூசி மருந்துகள் வந்தன. அந்த மருந்துகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீர்ந்துவிட்டன. இதையடுத்து, கரோனா தடுப்பூசி மருந்துகளை வேலூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில், மாநில நல்வாழ்வு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே, தடுப்பூசி தட்டுப்பாட்டால் வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி போட செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சிலர் பணம் கொடுத்து தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய சில தனியார் மருத்துவமனைகள் கரோனா தடுப்பூசியை அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி மருந்துகள் இருப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்திற்கு 7,000 கரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று வந்தடைந்தன. மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசி வந்துள்ளதால், முதன்முறையாக தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்த மருந்துகள் ஒதுக்கப்படவில்லை.

ஏற்கெனவே, தடுப்பூசி போட்டவர்கள் 2-வது தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் உள்ளதால், தற்போது வந்துள்ள 7,000 தடுப்பூசி மருந்துகள் 2-வது முறை தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, சுகாதாரத்துறையினர் கூறும்போது, "வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அதிகம் எதிர்பார்த்தோம். ஆனால், குறைவாக வந்துள்ளன. எனவே, 45 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலும் முதல் முறையாக தடுப்பூசி போட யாரும் வரவேண்டாம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2-வது முறை தடுப்பூசி போடப்படுகிறது. இது தவிர, ஏற்கெனவே கடந்த மாதம் சிறப்பு முகாம் நடந்த பகுதிகளிலும் 2-வது தடுப்பூசி செலுத்துவதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு அங்கு 2-ம் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்