தமிழக சட்டப்பேரவை பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டனி அமைத்திருந்த பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் நயினார் நாகேந்திரனும், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும், மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதியும், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தியும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் பாஜக குழு தலைவர் தேர்வுக்கான கூட்டம் இன்று (மே 09) சென்னை, தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "இந்தத் தேர்தலில் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமர்வார்கள் என்றோம். அது இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது. தமிழகத்தில் பாஜக வளர முடியாது என்று சொன்னவர்களின் முகத்தில் கரியைப் பூசி, தமிழகத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது.

சட்டப்பேரவையை தாங்கிப்பிடிக்கும் 4 தூண்களாக எங்கள் உறுப்பினர்கள் செயல்படுவார்கள். அரசாங்கத்திற்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றனர். அரசாங்கத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.

தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்மொழி, கலாச்சாரத்துக்காகவும் எங்கள் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். எங்கள் பணி பேரவை உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து நடைபெறும்.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக குழு தலைவராக ஒருமனதாக முன்னாள் அமைச்சரும் மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனை தேர்வு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE