கோவையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை தினமும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 2 ஆயிரத்தை கடந்துள்ளது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை சராசரியாக 1,500-ஆக உள்ளது.
வீடு திரும்புவோரின் எண்ணிக்கையைவிட புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் போதிய காலியிடங்கள் இல்லாத சூழல் உள்ளது.
தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை கிடைப்பதில்லை என்பதால், நோயாளிகளின் உறவினர்கள் பலர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பல தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறியதாவது: "கோவை மாவட்டத்தில் இன்று (மே.8) ஒரே நாளில் 2,117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 10,908 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 4,102 பேர் கோவையில் சிகிச்சைபெற்று வரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 504 படுக்கைகள் உள்ளன. இதில், 500 படுக்கைகள் நிரம்பிவிட்டன. தீவிர சிகிச்சை பிரிவில் காலியிடம் இல்லை. இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் இதே நிலைதான் உள்ளது.
கோவையில் உள்ள 54 தனியார் மருத்துவமனைகளில் தற்போது கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தமுள்ள 2,390 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் 2,143 படுக்கைகள் நிரம்பிவிட்டன. பெரும்பாலான பெரிய மருத்துவமனைகளில் ஒரு இடம்கூட இல்லை. அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். ஒரு நாளைக்கு 2 முறை காலி படுக்கைகளின் எண்ணிக்கை இருப்பு நிலை மற்றும் மருத்துவமனையின் தொலைபேசி எண் பதிவேற்றப்படும். அதன் சமீபத்திய விவரத்தை அறிய மருத்துவமனையை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.
தடுப்பூசிக்கு தொடரும் தட்டுப்பாடு
மாவட்டத்தில் மொத்தம் 3.81 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார கிடங்கில் இன்று மாலை நிலவரப்படி தடுப்பூசி இருப்பில் இல்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 280 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன. கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களிடமிருந்து இன்று ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago