2 வார முழு ஊரடங்கு; அன்புமணி ராமதாஸ் வரவேற்பு: மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக அரசு கரோனா பரவலைத் தடுக்க 2 வார ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதை வரவேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்பதால் இக்காலக் கட்டத்துக்கான மின் கட்டணத்தை ரத்துச் செய்யவேண்டும் எனக் கோரியுள்ளார்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா சங்கிலியை உடைக்க 2 வார ஊரடங்கை அரசு அமல்படுத்த உள்ளது. இதை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தி வருமாறு:

“கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை.

தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இது தான் சிறந்த வழி. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்!

முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் திமுகவும் வலியுறுத்திய கோரிக்கை தான்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE