தனியார் நிறுவனங்களிடம் கரோனா தடுப்பூசி வாங்கும்போது தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? என மத்திய அரசிடம் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்சி பெல் நிறுவனத்தில் 2003 முதல் மூடப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், செங்கல்பட்டு திருக்கழுகுன்றத்தில் 2012-ல் திறக்கப்பட்ட மத்திய அரசின் எச்எல்எல் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய உத்தரவிடக் கோரியும் மதுரையைச் சேர்ந்த வெரோணிகா மேரி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், செங்கல்பட்டில் ஆண்டுக்கு 584 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் 2012-ல் தொடங்கப்பட்டது. இந்த வளாகம் 9 ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வரவில்லை.
திருச்சி பெல் நிறுவன ஆக்சிஜன் பிளான்ட்களில் ஒரு மணி நேரத்துக்கு 140 மெட்ரிக் கியூப் ஆக்சிஜன் தயாரிக்கலாம். இந்த பிளான்ட்களில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் 15 முதல் 20 நாளில் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கரோனாவுக்கு முன்பு வரை இந்தியா தடுப்பூசி தயாரிப்பில் முன்னோடியாக திகழ்ந்தது. உலகளவில் தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருந்தது. தற்போது இந்தியாவில் இரு தனியார் நிறுவனங்கள் மட்டுமே கரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது.
இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிகளை தயாரிக்கும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.
இதில் தமிழகம், மும்பை, இமாச்சல பிரதேசத்தில் செயல்பட்டு வந்த தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மை என்வென்று தெரியவில்லை.
அதே நேரத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கோவாக்சின், சீரம் நிறுவனத்திடம் கோவிசீல்டு தடுப்பூசிகளை அரசுகள் வாங்கி வருகின்றன. இவ்விரண்டு நிறுவனமும் தனியார் நிறுவனங்கள். தடுப்பூசி தயாரிக்கும் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை ஏன் பயன்படுத்தவில்லை.
கோவிசீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ.150-க்கும், மாநில அரசுக்கு ரூ.300-க்கும், கோவாக்சின் தடுப்பூசி மத்திய அரசுக்கு 150, மாநில அரசுக்கு ரூ.600-க்கும் விற்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை 136 கோடியாகும். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டியது வரும்.
தனியார் நிறுவனங்களிடம் தடுப்பூசி வாங்கும் அரசுகளின் முடிவை நீதிமன்றம் குறை கூறவில்லை. அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரித்தால் தடுப்பூசிக்காக தனியார் நிறுவனங்களிடம் பேரம் பேச வேண்டிய நிலை ஏற்படாது என்ற வேதனை தான்.
எனவே, திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் கியூப் ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி உள்ளதா? இங்கு ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அனுப்பிய கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
அவசர காலத்தை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு உதவி செய்த நிலையில், திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
இந்தியாவில் எத்தனை தடுப்பூசி உற்பத்தி மையங்கள் உள்ளன? அவற்றின் உற்பத்தி திறன்? தற்போதைய நிலை என்ன? செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தின் உற்பத்தி திறன்? அதன் தற்போதைய நிலை என்ன?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் ) நிதியுதவியுடன் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு பதிலாக பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி செய்வது ஏன்?
மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக கரோனா தடுப்பூசி உட்பட பிற தடுப்பூசிகளுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தது? தனியார் நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தடுப்பூசி வாங்கும் போது, அரசுக்கு சொந்தமான தடுப்பூசி மையங்களை புதுப்பித்து தடுப்பூசி தயாரிக்க எடுத்த நடவடிக்கை என்ன? ஆகிய கேள்விகளுக்கு மத்திய அரசு மே 19-க்குள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago