கமல் தனது அணுகுமுறையில்‌ இருந்து மாறவில்லை; மநீமவில் இருந்து விலகுகிறேன்: மகேந்திரன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கமல்,‌ தனது அணுகுமுறையில்‌ இருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத்‌ தெரியவில்லை, மாறிவிடுவார்‌ என்கின்ற நம்பிக்கையும்‌ இல்லை என்று கூறியுள்ள மக்கள் நீதி மய்யம்‌ கட்சியின்‌ துணைத் தலைவர்‌ மகேந்திரன்‌, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ துணைத் தலைவர்‌ மகேந்திரன்‌ ஆகிய நான்‌ கனத்த இதயத்துடனும்‌, தெளிவான சிந்தனையுடனும்‌‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியில்‌ இருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன்‌.

இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான்‌ இன்று எடுப்பதற்கான காரணத்தை, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி நிர்வாகிகள்‌ மற்றும்‌ உறுப்பினர்‌ அனைவருக்கும்‌ தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும்‌ பொறுப்பும்‌ ஆகும்‌.

கட்சியில்‌ இணைதல்‌

2018இல்‌ கமல்‌ஹாசனுடன்‌ எனக்கு அறிமுகம்‌ ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வரும்படி என்னை அழைத்தார்‌. ஜனநாயக ரீதியாகக் கட்டமைக்கப்பட்ட, ஓர் அரசியல்‌ அமைப்பான மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ மீது பெரும்‌ நம்பிக்கை கொண்டும்‌, கமல்‌ மீதான நம்பிக்கையினாலும்‌, 2018 நவம்பர்‌ மாதம்‌ அவர்‌ கேட்டுக்கொண்டதற்கு இணங்க, என்னை மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ துணைத் தலைவராக இணைத்துக்கொண்டு, முழுமனதுடன்‌ செயலாற்றினேன்‌.

2018இல்‌ இருந்து 2019 வரையிலான நேரத்தில்‌, கமலின்‌ வழிகாட்டுதலின்படி கட்சியினையும்‌, அவரின்‌ கொள்கைகளையும்‌, தமிழகத்தின்‌ அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ கொண்டுசென்று சேர்க்கும்‌ பணியினை கட்சி நிர்வாகிகள்‌ மற்றும்‌ தொண்டர்களின்‌ உதவியுடன்‌ செயல்படுத்தினேன்‌.

நாடாளுமன்றத் தேர்தல்‌

2019 நாடாளுமன்றத்‌ தேர்தலின்‌ பொழுது மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி, அத்தேர்தலில்‌ கண்டிப்பாகப் போட்டியிட வேண்டும்‌ என்று கமலிடம்‌ நான்‌ தெரிவித்தபொழுது, அதை ஏற்றுக்கொண்டு தேர்தலில்‌ போட்டியிட்டோம்‌. தமிழக மக்களின்‌ பேராதரவினையும்‌, பெரும்‌ நம்பிக்கையினையும்‌ பெற்று நமது கட்சியினைத் தமிழகத்தின்‌ வளர்ந்துவரும்‌ மிக முக்கியமான பெரிய கட்சியாக, கமலுடன்‌, நாம்‌ அனைவரும்‌ இணைந்து வளர்த்தெடுத்தோம்‌.

சட்டப்பேரவைத்‌ தேர்தல்‌ கனவு

அதைத் தொடர்ந்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலில்‌ கமலை முதல்வராக்க வேண்டும்‌ என்கின்ற பெரிய கனவுடன்‌ பயணிக்கத் தொடங்கினோம்‌. நமது கனவிற்குத்‌ துணையாக இருக்கும்‌ என்கின்ற நோக்கத்தில்‌ “ஐபேக்‌” நிறுவனத்துடனும்‌ பேச்சுவார்த்தை நடத்தி, நமது கட்சியின்‌ தேர்தல்‌ வியூகங்களை வகுத்திட அதற்கான ஒப்பந்தமும்‌ ஏப்ரல்‌ 2019இன்‌போது கையெழுத்திடப்பட்டு 2019, செப்டம்பர்‌ மாதம்‌ அந்த ஒப்பந்தம்‌ கைவிடப்பட்டது.

அதன்‌பின்‌ தலைவரின்‌ முக்கிய ஆலோசகராக இருந்த முன்னாள்‌ டிவி மீடியாவினைச்‌ சேர்ந்த மகேந்திரன்‌ மற்றும்‌ சிலர்‌ கமலுக்குக் கொடுத்த ஆலோசனையின்‌ பேரில்‌, “சங்க்யா சொல்யூசன்ஸ்‌” என்கின்ற ஒரு நிறுவனத்தை சுரேஷ்‌ அய்யர்‌ என்பவரது தலைமையில்‌ தொடங்கி, அதனைக் கட்சியின்‌ தேர்தல்‌ ஆலோசனை நிறுவனமாக உருவாக்கினர்‌.

2019 அக்டோபர்‌ மாதம்‌, இந்த அமைப்பு தொடங்கப்பட்டு "கட்சியின்‌ பிரச்சார அலுவலகம்‌” என்கின்ற பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஆறு மாத காலத்திற்குப்‌ பிறகும்‌ கூட, அவர்கள்‌ கட்சிப்‌ பிரச்சாரத்திற்குப் பயனுள்ள எவ்விதப் பணிகளையும்‌ சரிவரச் செய்யாமல்‌, கட்சிக்குப் பெரும்‌ செலவுகளை மட்டுமே உயர்த்திக்கொண்டு இருந்தனர். இது எனக்கும்‌ கட்சியின்‌ முக்கிய நிர்வாகிகளுக்கும்‌ புரிந்தது.

இதுகுறித்துக் கமலிடம்‌ நான்‌ தனிப்பட்ட முறையில்‌ தெரிவித்தபொழுது, தேர்தல்‌ வரை மட்டுமே அவர்களின்‌ பங்களிப்பு இருக்கும்‌ என்றும்‌, அவர்களைத் தானே கண்காணிப்பேன்‌ என்றும்‌, தனது கட்டுப்பாட்டில்‌தான்‌ அவர்கள்‌ இயங்குவார்கள்‌ என்றும்‌ என்னிடம்‌ அவர் உறுதியளித்தார்‌.

சட்டப்பேரவைத் தேர்தலில்‌ நாம்‌ வெற்றிகொள்ள வேண்டும்‌ என்கின்ற ஒரே காரணத்தினால்‌ கமலின்‌ இம்முடிவினை எப்பொழுதும்‌போல்‌ ஏற்றுக்கொண்டு நான்‌ செயல்பட்டேன்‌. ஆனாலும்‌ அதைத் தொடர்ந்து அந்நிறுவனம்,‌ கட்சிக்காக முன்னெடுத்த எவ்விதச்‌ செயல்பாடுகளும்‌ கட்சியின்‌ பிரச்சார ரீதியான வளர்ச்சிக்கு உதவிடவில்லை.

“சங்க்யா சொல்யூசன்ஸின்‌ தலைவர்‌ சுரேஷ்‌ அய்யர்‌ மற்றும்‌ தலைவரின்‌ முக்கிய ஆலோசகரான முன்னாள்‌ டிவி மீடியாவினைச்‌ சேர்ந்த மகேந்திரன்‌ ஆகிய இருவரும்‌ இணைந்து, கட்சியினரிடம்‌ பிரித்தாளும்‌ சூழ்ச்சியினையும்‌, அடக்குமுறை அணுகுமுறையினையும்‌ கையாண்டு வருகின்றது என்றும்‌, அதன்‌ காரணத்தினால்‌ கட்சிக்கு ஏற்படவிருக்கின்ற ஆபத்தினையும்‌ கமலிடம்‌ தொடர்ந்து எடுத்துச் சொன்னேன்‌.

அப்பொழுது கமல்‌‌, இவர்கள்‌ தேர்தல்‌ வரை மட்டும்‌தான்‌ நம்முடன்‌ இருப்பார்கள்‌, அதற்குப் பிறகு நானே அவர்களை வெளியே அனுப்பிவிடுவேன்‌ என்று மீண்டும்‌ என்னிடம்‌ உறுதியளித்தார்‌. பிரச்சார அலுவலகத்தின்‌ செயல்பாடுகள்‌ சரிவர இல்லை என்று பலமுறை அவரிடம்‌ தனிப்பட்ட முறையில்‌ எடுத்துச்‌சொல்லி இருந்தும்‌ கூட, அது குறித்து வெளியே யாரிடமும்‌, நான்‌ பேசியதில்லை.

2020 முழுவதுமே பிரச்சார அலுவலகமான சங்க்யா சொல்யூஷன்சின்‌ தலைவர்‌ மற்றும்‌ கமலின்‌ முக்கிய ஆலோசகர்‌, கமல்‌ஹாசனுக்கான எவ்விதப் பிரச்சார வியூகங்களையும்‌ வகுக்காமல்‌, அவரது சுற்றுப் பயணங்கள்‌ எதையும்‌ முடிவு செய்து செயல்படுத்திடாமலும்‌ மக்களுடன்‌ அவருக்கு இருந்த தொடர்பினை சுருக்கிக்கொண்டே வந்தனர்‌.

2020ஆம்‌ ஆண்டில்‌ கரோனா பெருந்தொற்றுக் காலத்தில்‌, பிற அரசியல்‌ கட்சித் தலைவர்கள்‌ கரோனா விதிமுறைகளுக்குட்பட்டு, மக்கள்‌ சேவைக்காகக் களத்தில்‌ இறங்கி மக்கள்‌ நலப்பணி செய்தபொழுதும்‌ கூட, இந்நிறுவனம்‌ கமலைக் களத்தில்‌ இறங்கி மக்கள்‌ நலப்பணிகள்‌ செய்திடுவதற்கான சிறு முயற்சிகூட எடுக்கவில்லை என்கின்ற செய்தி கடும்‌ விமர்சனத்திற்குள்ளானது.

2020 அக்டோபர்‌ மாதம்‌ நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுக்காக நடைபெற்ற கலந்துரையாடல்‌ கூட்டத்தில்‌, கமலின்‌ அணுகுமுறைகளை மாற்றி, அவரைத் தனியாக மேடையில்‌ அமரவைப்பது, நிர்வாகிகள்‌ மற்றும்‌ தொண்டர்கள்‌ அவரை அணுகவிடாமல்‌ பார்த்துக்கொள்வது என்று, இந்த அதிகார மையம்‌ தடைகளை விதிக்கத்‌ தொடங்கியது.

இவையனைத்தையும்‌ சங்க்யா சொல்யூசன்சின்‌ தலைவரும்‌, தலைவரின்‌ முக்கிய ஆலோசகரும்‌ இணைந்து, கமலுக்கு இதுபோன்ற புதிய தவறான அணுகுமுறைகளைக் கையாளச்‌ சொல்வதாகவே நான்‌ நினைத்திருந்தேன்‌. எனவே இதுகுறித்து அவரிடம்‌ சேலத்தில்‌ 2021 ஜனவரி முதல்‌ வாரப் பிரச்சாரத்தின்‌போது, மறுபடியும்‌ எனது கருத்தினையும்‌ ஆதங்கத்தையும்‌ மிகுந்த மனக்கவலையுடன்‌ எடுத்துரைத்தேன்‌. அப்போதும்‌ கூட கமல்‌ஹாசன்‌‌, நாம்‌ தேர்தல்‌ வரை இவர்களைப்‌ பொறுத்துக்கொள்ள வேண்டும்‌ என்றும்‌, அதற்குப்‌ பிறகு நானே அவர்களை வெளியே அனுப்பி விடுகிறேன்‌ என்றும்‌ மீண்டும்‌ எனக்கு உறுதி அளித்து பொறுத்துக்கொள்ளக்‌ கூறினார்‌.

இவ்வாறு ஒவ்வொரு முறையும்‌, இப்பிரச்சினையை அவரிடத்தில்‌ நான்‌ எடுத்துச்‌ சொன்ன பிறகும்‌ கூட, அமைதியாக இந்த இன்னல்களை எல்லாம்‌ பொறுத்துக்‌கொள்ள அறிவுறுத்தப்பட்டேன்‌. எனது உணர்வினைப் போலவே பிற பொதுச்செயலாளர்கள்‌, மாநிலச்‌ செயலாளர்கள்‌ மற்றும்‌ மாவட்டச்‌ செயலாளர்களும்‌ கவலை கொண்டனர்‌.

ஆனால்‌, கமல் இட்ட ஆணையின்‌ படி, மற்ற நிர்வாகிகள்‌ அனைவரிடமும்‌ நிலைமையை எடுத்துச்சொல்லி அவர்கள்‌ அனைவரையும்‌ உற்சாகப்படுத்தினேன்‌. தேர்தல்‌ அறிவிக்கப்பட்ட பின்‌, கூட்டணி குறித்து கமலின்‌ முடிவே இறுதியானது என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது. இருப்பினும்‌ தேர்தலில்‌, கட்சி யாரிடம்‌ கூட்டணி வைத்துக்‌ கொள்ளப்போகின்றது என்கின்ற அடிப்படைத்‌ தகவலைக்‌ கூட நிர்வாகக்குழு, செயற்குழு என யாரிடமும்‌ தெரிவிக்கப்படாமல்‌ வைத்திருந்து, மார்ச்‌ முதல்‌ வாரம்‌ வெளியே தெரிவிக்கப்பட்டது.

தேர்தல்‌ வியூகங்களை வகுத்திடவும்‌, அதை முறையாகக் களத்தில்‌ செயல்படுத்திடவும்‌ நேரம்‌ குறைவாக இருக்கின்றது போன்ற எவ்வித கவலையும்‌ இன்றி “தலைமை” இருந்த ஒரு சூழல்‌ கட்சிக்குப் பெரும்‌ பின்னடைவாக இருந்தது. நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ மக்களிடையே பெரிய நம்பிக்கையைப்‌ பெற்று, மாற்று அரசியல்‌ கட்சியாக, மக்கள்‌ நீதி மய்யம்‌ உருவெடுத்த பின்னரும்‌ கூட, 234 தொகுதிகளில்‌ 100 இடங்களைக் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது பொதுவெளியிலும்‌, ஊடகங்களிலும்‌, கட்சி அபிமானிகள்‌, கட்சித் தொண்டர்கள்‌, மாநிலச்‌ செயலாளர்கள்‌, மாவட்டச்‌ செயலாளர்கள்‌ என அனைவரிடையே பெரும்‌ அதிர்ச்சியினையும்‌ ஆதங்கத்தினையும்‌ ஏற்படுத்தியது.

அதே ஆதங்கமும்‌ கவலையும்‌ எனக்கு இருந்தாலும்‌, எப்போதும்‌ போல்‌, கட்சியின்‌ நல்ல பெயருக்கு எவ்விதத்திலும்‌ களங்கம்‌ ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தினால்‌, அதை வெளிப்படையாக என்னால்‌ யாரிடமும்‌ தெரிவிக்க இயலாத ஒரு சூழல்‌தான்‌ இருந்தது. ஒரு பக்கம்‌ கூட்டணிக் கட்சிகளுடன்‌, கூட்டணி பேசப்பட்டது. ஆனால்‌ மறுபக்கம்‌ கட்சியினரிடம்‌ தேர்தலில்‌ போட்டியிட வேட்பு மனுவிற்கான விண்ணப்பங்களும்‌, பணமும்‌ பெறப்பட்டு நேர்காணலுக்கும்‌ தமிழகம்‌ முழுவதில்‌ இருந்தும்‌ உண்மைத்‌ தொண்டர்கள்‌ அழைக்கப்பட்டு கண்துடைப்பு நாடகமாகவே நடைபெற்றது எனக்கு அதிர்ச்சியளித்தது.

வேட்பாளர்‌ அறிவிப்பினை மிக விரைவில்‌ அறிவித்து, அவர்கள்‌ தங்கள்‌ தொகுதிகளில்‌ பிரச்சார வேலைகளைத்‌ தொடங்கியிருக்க வேண்டும்‌, ஆனால்‌ சங்க்யா சொல்யூசன்சின்‌ தலைவர்‌ மற்றும்‌ கமலின்‌ முக்கிய ஆலோசகரின் ஆலோசனைக்கேற்ப, கூட்டணி முடிவான பிறகும்‌ கூட, நமது கட்சி வேட்பாளர்களுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த எவ்வித முடிவும்‌ எடுக்கப்படாமல்‌, மிகவும்‌ தாமதமாக, தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்னர்‌தான்‌ வேட்பாளர்‌ பட்டியல்‌ அறிவிக்கப்பட்டது.

இந்தக்‌ காலதாமதமே, வேட்பாளர்களுக்கும்‌ கட்சித் தொண்டர்களுக்கும்‌ தங்கள்‌ தொகுதிகளில்‌ தேர்தல்‌ பிரச்சாரம்‌ செய்வதற்கும்‌, தேர்தல்‌ பணிகளைச்‌ செய்வதற்கும்‌ இயலாத ஒரு சூழலை ஏற்படுத்தியது. அதுவே கட்சியின்‌ தோல்விக்கு இன்னொரு காரணமாக இருந்தது. இதற்குப் பிறகு, கமல்‌ போட்டியிட உள்ள தொகுதி குறித்த பேச்சு எழுந்தபொழுது‌ அவர்‌ எந்தத் தொகுதியில்‌ போட்டியிட உள்ளார்‌ என்பது குறித்து அவர்களால்‌ தெரிவிக்கப்‌படவில்லை. நான்‌ அவர்‌ ஒரு தொகுதியில்‌ மட்டும்‌ போட்டியிட உள்ளார்‌ என்றால்‌, அவர்‌ சென்னையில்‌ வேளச்சேரி போன்ற தொகுதியில்‌ போட்டியிட வேண்டும்‌ என்கின்ற எனது கருத்தை முன்வைத்தேன்‌.

ஏனெனில் ஏறத்தாழ 20க்கும்‌ மேற்பட்ட தொகுதிகள்‌ சென்னை பகுதியில்‌ வருவதாலும்‌, அங்கு கமல்‌ஹாசன்‌ போட்டியிட்டால்‌ கட்சி சார்பாகப் போட்டியிடும்‌ முக்கிய நிர்வாகிகளான பொதுச் செயலாளர்கள்‌, மாநிலச்‌ செயலாளர்களுக்கு அது ஊக்கமாகவும்‌, வெற்றி வாய்ப்பினையும்‌ அதிகரிக்கச் செய்யும்‌ என்றும்‌ தெரிவித்தேன்‌. கட்சியில்‌ பலரும்‌ அதே கருத்தை வலியுறுத்தினர்‌. அவர்‌ இரண்டு தொகுதிகளில்‌ போட்டியிட விருப்பப்பட்டால்‌ மட்டுமே கோவையைத்‌ தேர்ந்தெடுக்க வேண்டும்‌ என்றும்‌ தெளிவாக உணர்த்தினேன்‌.

ஆனால்‌, இவை எல்லாவற்றிற்குப் பிறகும்‌, இறுதியாகத் தேர்தலுக்கு நான்கு வாரம்‌ மட்டும்‌ உள்ள நிலையில்‌ மார்ச்‌ 11 அன்று, கமல்‌ ஒரே ஒரு தொகுதியில்‌ மட்டுமே போட்டியிடுவார்‌ என்றும்‌ அதுவும்‌ கோவை தெற்கு தொகுதியில்‌ மட்டுமே போட்டியிடுகிறார்‌ என்றும் சங்க்யா சொல்யூஷன்ஸின்‌ தலைவரும்‌, கமலின்‌ ஆலோசகர்களாலும்‌ முடிவெடுக்கப்பட்டு நிர்வாகக் குழுவினரிடம்‌ தெரிவிக்கப்பட்டது.

கோவை தெற்கு தொகுதியில்‌ கமல்‌ ‌போட்டியிடும்‌ முடிவில்‌ இருந்த காரணத்தினால்‌, குறைந்தபட்சம்‌‌ அவரின்‌ தொகுதியின்‌ தேர்தல்‌ களப் பிரச்சாரப் பணிகளை சங்க்யா சொல்யூசன்ஸின்‌ தலைவரிடமோ, கமலின்‌ முக்கிய ஆலோசகரிடமோ கொடுக்க வேண்டாம்‌ என்றும்‌ நான்‌ முன்னெடுத்துச்‌ செய்கிறேன்‌ என்றும்‌ கமலின்‌ வெற்றிக்கு முழுப் பொறுப்பினை எனக்குக் கொடுக்க வேண்டும்‌ என்றும்‌ நான்‌ கமலிடம்‌ மன்றாடினேன்‌.

ஏனெனில்‌ ஏறத்தாழ 1.5 வருடங்களாக கட்சியினைப் பலவீனப்படுத்தி, கட்சியினரிடம்‌ பிரித்தாளும்‌ சூழ்ச்சியைக் கையாண்டு, கோடிக்கணக்கில்‌ செலவுக்‌ கணக்கு காண்பித்து, மக்களிடம்‌ இருந்தும்‌ பெரும்பான்மையான கட்சியினரிடம்‌ இருந்தும்‌ உங்களைத்‌ தனிமைப்படுத்தி வைத்திருக்கும்‌ உங்கள்‌ ஆலோசகர்கள்‌, கூட்டணியில்‌ குழப்பம்‌, தொகுதிப் பங்கீட்டில்‌ குழப்பம்‌, வேட்பாளர்‌ தேர்வில்‌ குழப்பம்‌, கட்சியின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ குழப்பம்‌ என்று தொடர்‌ குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்‌ சங்க்யா சொல்யூசன்ஸின்‌ தலைவர்‌ மற்றும்‌‌ ஆலோசகரின்‌ கையில், கமலின் தொகுதிக்கான தேர்தல்‌ பிரச்சாரப்‌ பணியினையும்‌ இதர தேர்தல்‌ பணிகளையும்‌ ஒப்படைத்தால்‌ இறுதியில்‌ இங்கும்‌ நமது வெற்றி வாய்ப்பு குறைவாகிவிடும்‌ என்பதைக் கமலிடம்‌ எடுத்துச்சொன்னேன்‌.

கோவை தொகுதி எனக்குப் பரிச்சயமான தொகுதி என்பதால்‌, அதில்‌ என்‌ தலைவருக்காக நான்‌ சிரமேற்கொண்டு பணிபுரிவேன்‌ என்று எடுத்துச் சொல்லப்பட்டும்‌ எனது கருத்து கேட்கப்படவில்லை. இறுதியில்‌ நான்‌ பயந்தபடியே நடந்தது. பெருவாரியாக வெற்றியடைய வேண்டிய கமலின்‌ வெற்றி வாய்ப்பு, இறுதியில்‌ முக்கிய ஆலோசகர்கள்‌ மற்றும்‌ சங்க்யா சொல்யூஸன்ஸின்‌ இயலாமையால்‌ அவரை வெற்றியடைய விடாமல்‌ செய்தது.

இவ்வளவு நடந்த பின்னரும்‌ கூட கமல் பலமுறை கூறியபடி, பிரச்சார அலுவலகமான சங்க்யா சொல்யூசன்ஸின்‌ தலைவர்‌ மற்றும்‌ கமலின்‌ முக்கிய ஆலோசகரையும்‌ தேர்தல்‌ முடிந்த பிறகாவது கட்சி விவகாரங்களில்‌ தலையிடாமல்‌ வைக்கச் செய்வார்கள்‌ என்று நினைத்து ஒரு மாத காலமாகக்‌ காத்திருந்தேன்‌. ஆனால்‌ தவறு செய்த சங்க்யா சொல்யூசன்ஸின்‌ தலைவரும்‌ முக்கிய ஆலோசகரும்‌, தங்கள்‌ தவறுகளை மறைத்து, திசைதிருப்பி அதைக் கட்சியினர்‌ மற்றும்‌ செயலாளர்களின்‌ தவறுபோலச் சித்தரித்து அதைத் தலைவரையும்‌ நம்ப வைத்து இருப்பதை என்னால்‌ ஏற்றுக்‌கொள்ள முடியவில்லை.

கட்சியின்‌ இத்துணை பெரிய தோல்விக்குப்‌ பிறகும்‌, தனது தோல்விக்குப்‌ பின்னரும்‌ கமல்,‌ தனது அணுகுமுறையில்‌ இருந்த மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத்‌ தெரியவில்லை, மாறிவிடுவார்‌ என்கின்ற நம்பிக்கையும்‌ இல்லை. இந்தச் சூழல்‌தான்‌ என்னை, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியில்‌ இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிக கவனமாக எடுக்க வைத்திருக்கின்றது.

ஏனெனில்‌ ஓர் அரசியல்‌ கட்சி என்பது சாமானியர்களின்‌ கட்சியாகவும்‌, ஜனநாயக முறைப்படியும்‌, எதிர்க் கருத்துகளையும்‌ ஏற்றுக்கொள்ளும்‌ வகையிலும்‌ அமைந்திடவேண்டும். இதில்‌ நம்பிக்கை கொண்ட நான்‌, கட்சியில்‌ இருந்து விலகிச்செல்லும்‌ இந்நேரத்தில்‌ கூட, ‌கமல்‌ தனது தன்னிச்சையாக முடிவெடுக்கும்‌ போக்கினையும்‌, சங்க்யா சொல்யூசன்ஸ்‌ என்கின்ற நிறுவனத்தையும்‌, அதன்‌ ஆலோசகர்களையும்‌ மட்டும்‌ நம்பி, கட்சி உறுப்பினர்‌ அனைவரின்‌ மீதும்‌ களங்கத்தை ஏற்படுத்தி, பலிகடாவாக ஆக்கும்‌ அணுகுமுறையில்‌ இருந்து தன்னை மாற்றிக்‌ கொள்ளவேண்டும்‌ என்ற கோரிக்கையுடன்‌தான்‌ செல்கின்றேன்‌.

நேர்மை இல்லாதவர்களும்‌ திறமை இல்லாதவர்களும்‌ வெளியே செல்வதற்கு எனது கட்சியின்‌ கதவைத்‌ திறந்தே வைத்திருக்கின்றேன்‌ என்று கமல்‌ஹாசன்‌ சமீபகாலத்தில்‌ பலமுறை கூறியுள்ளார்‌. நேர்மையும்‌ திறமையும்‌ விசுவாசமும்‌ நிறைந்த பலர்‌ இந்தக்‌ கட்சியில்‌ இருக்கின்றனர்‌. அவர்களில்‌ ஒருவனாக, நான்‌ இந்தக்‌ கட்சியில்‌ இருந்து, நிமிர்ந்த நன்னடையுடனும்‌, நேர்‌கொண்ட பார்வையுடனும்‌, நேர்மை, திறமை மற்றும்‌ விசுவாசம்‌ குறித்த பாடத்தை மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ தலைவரின்‌ ஆலோசகர்களாக இருக்கின்ற, நான்‌ குறிப்பிட்ட நபர்களுக்கும்‌ சொல்லிக்கொடுக்கக்‌ கூடியவன்‌ என்கின்ற முறையில்‌ அதற்கான திறமையுடனும்‌ நேர்மையுடனும்‌ நான்‌ வெளியே செல்கின்றேன்‌.

கமல்‌ஹாசன்‌ தன்னைச்‌ சுற்றி முகஸ்துதி செய்யும்‌ தலையாட்டி பொம்மைகளை வைத்துக்கொண்டு, யாருடைய ஜனநாயக ரீதியிலான ஆலோசனையினையும்‌ ஏற்றுக்கொள்ளாமல்‌, இதே அணுகுமுறையினைத்‌ தொடர்ந்து மேற்கொண்டு அது அவருக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தால்‌, அதனையும்‌ நான்‌ அப்போது பாராட்டத்‌ தயாராக இருப்பேன்‌. ஆனால்‌ எனக்குத்‌ தெரிந்த கமல்‌ஹாசன்‌, கொள்கைக்காகவும்‌, எளிய தொண்டர்களுக்குத் தோழனாகவும்‌, அனைத்து நல்ல தலைமைப் பண்புகளையும்‌ கொண்ட நம்மவராக மறுபடியும்‌ மாறிச் செயல்பட வேண்டும்‌ என்று வெளியே இருந்து வாழ்த்துகின்றேன்‌. அந்த மாற்றம்‌ இன்று நான்‌ வெளியே செல்வதன்‌ மூலம்‌ ஏற்பட்டுவிட்டால்‌, அதுவே நான்‌ இக்கட்சிக்குச் செய்யும்‌ மிகப்பெரும்‌ உதவியாக இருக்கும்‌ என்று உறுதியாக நம்புகின்றேன்‌.

கமல்‌ஹாசனால்‌ நான்‌ அரசியலுக்குள்‌ அடியெடுத்து வைத்திருந்தாலும்‌, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின்‌ உற்சாகமும்‌ உத்வேகமும்‌தான்‌ என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில்‌, இரண்டு பெரிய தேர்தல்களைச் சந்திப்பதற்கான வலிமையைக் கொடுத்தது. அதற்காக நான்‌ கமலுக்கும்‌ சக நிர்வாகிகளுக்கும்‌, ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும்‌, உறுப்பினர்களுக்கும்‌ எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்‌.

அரசியல்‌ எனும்‌ விதையை எனக்குள்‌ விதைத்த கமல்‌ஹாசனுக்கு என்‌ மனமார்ந்த நன்றிகள்‌. மக்கள்‌ சேவையை எங்கிருந்து செய்தாலும்‌ காந்தியார்‌ சொன்னதுபோல்‌ "நீங்கள்‌ பார்க்க விரும்பும்‌ மாற்றமாக இருங்கள்‌" என்பதற்கேற்ப சிறப்பாகவும்‌ அறத்துடனும்‌ செயல்படுவேன்‌ என்ற உறுதியுடன்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியில்‌ இருந்து விடை பெறுகிறேன்"‌.

இவ்வாறு மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்