'மருத்துவ அவசர நிலை' என்று சொல்லக்கூடிய அளவுக்கு கரோனா தீவிரம் இருப்பதால் அவசரமாக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) ஒன்றை உடனடியாகத் திறக்கக் கூறியுள்ளேன். ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு, தேவை ஆகியவற்றை அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
“கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமானதாக இருக்கிறது. நோய்ப் பரவலைத் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக நலப்படுத்துவது ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நாளை முதல் அவை செயல்பாட்டுக்கு வருகின்றன. வைரஸ் தாக்கியவர்களைக் காக்கும் பணியில் மருத்துவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளார்கள்.
‘மருத்துவ அவசர நிலை’ என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்நோயின் தீவிரம் இருப்பதால் அவசரமாக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) ஒன்றை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன். ஆக்சிஜன் தேவை, அதன் இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு - தேவை ஆகியவற்றைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் தெரிந்து - ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும்.
எந்த இடத்தில் இருப்பு உள்ளது - எந்த இடத்துக்கு அதிகமாகத் தேவை என்ற இரண்டு தகவல்களையும் ஒருங்கிணைக்கும் மையமாக இது இருக்கும். குறிப்பாக, ஆக்சிஜன் இருப்பு தகவல்கள்தான் இதில் முக்கியமானதாக இருக்கும். இந்தத் தகவல்கள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறேன். மாவட்ட அளவிலும் மாநில அளவிலுமான மையமாக இவை இருந்து செயல்படும். போர்க்காலத்தில் செயல்படுவதைப் போல நம்முடைய மருத்துவர்கள் செயல்பட்டு மக்கள் சேவையாற்றுவார்கள்.
நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய, முறையான சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் அளித்து வருகின்றன. குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது.
அரசு மருத்துவமனைகளைப் போலத் தனியார் மருத்துவமனைகளிலும் பெரும்பாலும் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போர்க்காலங்களில் செயல்படுவதைப் போலத் தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் செவிலியர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.
கரோனா பரவல் அதிகமாவதும், ஆக்சிஜன் தேவை கூடுதலாக ஆகிக்கொண்டு போவதுமான சூழலை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளோடு சேர்ந்து தனியார் மருத்துவமனைகளும் துரிதமாகச் செயல்பட்டாக வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago