தமிழகத்தில் ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார் ஆளுநர்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறைப்படி அழைப்பு விடுத்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற்றது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி 159 இடங்களைப் பெற்றது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் கூட்டு எண்ணிக்கை 133 ஆக உள்ளது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.

இந்நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று (மே 04) நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற மதிமுக கட்சியினர் 4 பேர், மனிதநேய மக்கள் கட்சியினர் இருவர், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகிய 8 பேர் கலந்துகொண்டனர்.

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார். முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்று (மே 05) காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, திமுக எம்எல்ஏக்கள் 125 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற 8 பேர் என சேர்த்து 133 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார். மேலும், அமைச்சரவைப் பட்டியலையும் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலினை ஆட்சியமைக்க விரைவில் அழைப்பார் என, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி, இன்று மதியம் 1.30 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் தனிச் செயலாளர் ஆனந்தராவ் படேல், ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்றார். அப்போது, மு.க.ஸ்டாலினை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக, அழைப்புக் கடிதத்தை ஸ்டாலினிடம் அவர் வழங்கினார்.

மேலும், கரோனா கட்டுப்பாடுகளுடன் பதவியேற்பு நிகழ்ச்சியை எப்படி நடத்துவது, மே 7 அன்று எந்த நேரத்தில் பதவியேற்பது, ஆளுநர் மாளிகையில் எந்த இடத்தில் பதவியேற்பது என்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்