கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதி உதவி வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கைச் செயல்படுத்துவதன் மூலம், கரோனா வைரஸ் பரவலை நிச்சயமாகக் கட்டுப்படுத்தி விட முடியும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 04) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத வேகத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கரோனா பரவல் 20,952 என்ற புதிய உச்சத்தை நேற்று எட்டியுள்ளது. கரோனா பரவல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 750% அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் கவலை அளிக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், இப்போது ஆபத்தான கட்டத்தை அடைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழகத்தின் தினசரி கரோனா தொற்று 2,817 மட்டும்தான்; சென்னையில் இந்த எண்ணிக்கை 1,083 ஆக இருந்தது. ஆனால், நேற்றைய நிலவரப்படி தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை சென்னையில் 6,150 ஆகவும், தமிழகம் முழுவதும் 20,952 ஆகவும் அதிகரித்துள்ளன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேர்தலுக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபான பார்கள், பெரிய கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றை மூட ஆணையிடப்பட்டது.

மூன்றாம் கட்டமாக, நாளை மறுநாள் முதல் (மே 06) அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் மட்டுமே அனுமதி, கடைகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வணிகம் உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவாது என்பதுதான் யதார்த்தம்.

கடந்த ஆண்டு கரோனா முதல் அலை பரவியபோது, மார்ச் மாதம் 7-ம் தேதிதான் தமிழகத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. அது ஜூலை மாதம் 27-ம் தேதி 6,993 என்ற உச்சகட்டத்தை அடைய ஏறக்குறைய 150 நாட்கள் ஆகின. அதற்குக் காரணம் மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கும், மக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வும்தான்.

ஆனால், இப்போது மார்ச் மாதத் தொடக்கத்தில் 400 என்ற அளவில் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை 60 நாட்களில் 21 ஆயிரம் என்ற இமாலய எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. இதற்குக் காரணம், அரசியல் சூழலால், போதிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததுதான்.

இனியாவது முழு ஊரடங்கு போன்ற கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், கரோனாவைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதாகி விடும். இப்போதே, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. தினசரி உயிரிழப்பும் 150-ஐக் கடந்துவிட்டது. கரோனா பரவல் சூழலின் தீவிரத்தை இனியும் முழுமையாக உணர்ந்து கொள்ளாவிட்டால், வட மாநிலங்களைப் போன்ற சூழலைத் தவிர்க்க முடியாது.

முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதால் மாநில அரசுக்கும், தொழில் மற்றும் வணிகத்துறைக்கும் ஏற்படும் பொருளாதார இழப்பையும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்பையும் நான் நன்றாக அறிவேன்.

ஆனால், குறித்த காலத்தில் இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், கரோனாவுக்கு ஏராளமான உயிர்களை இழக்க வேண்டியிருப்பதுடன், நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் போகும்போது ஏற்படும் சூழலால் இன்னும் மோசமான பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும்.

டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியாணா, கோவா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. கேரளா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சுமார் 10 மாநிலங்களில் தமிழ்நாட்டை விடக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார இழப்புகள் பெரிதா? உயிரிழப்புகள் பெரிதா? என்றால் உயிரிழப்புகள் தான் பெரிது எனக் கருதி அதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருளாதார இழப்புகள் ஏற்படும்பட்சத்தில் அவற்றைச் சரிசெய்து கொள்ளலாம். ஆனால், உயிரிழப்புகளை மீட்டெடுக்க முடியாது.

எனவே, தமிழகத்தில் கடுமையான முழு ஊரடங்கு என்ற கசப்பான முடிவை எடுப்பதைத் தவிர, வேறு வழியில்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு பொறுப்பேற்ற பிறகாவது இதைச் செய்தாக வேண்டும்.

முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி, பின்னர் கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கைச் செயல்படுத்துவதன் மூலம், கரோனா வைரஸ் பரவலை நிச்சயமாகக் கட்டுப்படுத்தி விட முடியும்.

ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்புகளை அரசு தான் ஈடுகட்ட வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு ரூ.5,000 வீதம் வாழ்வாதார உதவியும், இலவச உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதற்கான செலவில் சரி பாதியை மத்திய அரசிடம் போராடிப் பெறவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொரு புறம் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஆக்சிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அம்மாவட்டங்களுக்குப் போதுமான ஆக்சிஜனை வழங்கி நோயாளிகளைக் காப்பாற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்