''50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று கட்சியிலும், ஆட்சியிலும் நிர்வாக முத்திரைகளைப் பதித்த பெருமை கொண்ட ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்கிற வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைத்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது'' என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''கடந்த 10 ஆண்டுகால அதிமுகவின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை திமுக தலைவரும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் அமைந்திட தமிழக மக்கள் அமோக ஆதரவுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று கட்சியிலும், ஆட்சியிலும் நிர்வாக முத்திரைகளைப் பதித்த பெருமை அவருக்கு உண்டு.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றத்தை உறுதி செய்கிற வகையில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைத்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
இத்தகைய வெற்றியை ஈட்டுவதற்காக ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிக மிக வித்தியாசமான, எவரும் இதுவரை செய்யாத வகையில் புரட்சிகரமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டதற்கு இன்றைக்குப் பலன் கிடைத்திருக்கிறது. தமிழக மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஈடு கொடுக்கிற வகையில் மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தை வழிநடத்திய முதுபெரும் தலைவர்களான பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் காட்டிய வழியில் இன்றைக்கு ஆறாவது முறையாக திமுக தலைமையில் ஸ்டாலின் ஆட்சி அமைக்க இருக்கிறார்.
அவர் எதிர்கொள்ள இருக்கிற சவால் மிக்க பணிகளை மிகச் சிறப்பான முறையில் தீர்வு கண்டு மிகப் பெரிய வெற்றியை பெறுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி முன்மொழிந்து தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய பெருமை ஸ்டாலினுக்கு உண்டு.
அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என வலியுறுத்திக் கூறியது, இன்றைக்குத் தமிழக மக்களின் பேராதரவோடு நிறைவேறியிருக்கிறது.
இந்த நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாக அமைந்ததாலும், நீண்டகாலமாக நல்லிணக்கமும், சரியான புரிதலோடும் செயல்பட்ட காரணத்தாலும் இன்றைக்கு 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
தமிழகத்திற்கான விடியல் இன்று தொடங்கியிருக்கிறது. இந்த விடியலின் மூலம் தமிழக மக்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கிற அனைத்துப் பின்னடைவுகளுக்கும் தீர்வு காண்கிற வகையில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியில் ஈடுபட வேண்டிய பொறுப்பும், கடமையும் அவருக்கு இருக்கிறது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிற ஆற்றலும், அனுபவமும் மிக்க ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறத் தோளோடு தோள் நின்று செயல்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பாக மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago