தமிழக நிலவரம்; முந்தும் திமுக; துரத்தும் அதிமுக: தபால் வாக்குகள் விவரம்

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஆனாலும், அதிமுக நெருங்கி வருகிறது. கமல்ஹாசன் அவர் தொகுதியில் முன்னணியில் உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக கட்சிகள் தனித்தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. 5 முனைப் போட்டியில் முதலிரண்டு இடங்களுக்கு அதிமுக, திமுக இடையே போட்டி கடுமையாக உள்ளது.

மூன்றாம் இடத்தில் உள்ள அணிகள் கடும் போட்டியைக் கொடுக்கும், சில இடங்களில் வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கும் என்ற நிலையில் இந்தக் கட்சிகள் இருப்பதாகக் கருதப்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதை தற்போது எண்ணப்படும் தபால் வாக்குகள் நிரூபிக்கின்றன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன.

தமிழகம் முழுவதும் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஒரு சுற்றுக்கு 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்படி தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதில் திமுக 80 இடங்களிலும், அதிமுக 52 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது. தொடர்ந்து முக்கிய விஐபிக்கள் முன்னிலையில் உள்ளனர்.

தபால் வாக்குகள் எதையும் தீர்மானிக்காது என்றாலும் தற்போது 9.30 மணி நிலவரப்படி ஓரளவுக்கு முன்னணி நிலவரத்தைச் சொல்வதாக அது அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE