தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி விநியோகம் நிறுத்தம்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பு உள்ளது

By க.சக்திவேல்

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது தவணைக்கு அரசு மருத்துவமனைகளை நாடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

45 வயதுக்கு மேற்பட்டவர்க ளுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், அங்கீகரிக்கப் பட்ட தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணப்படியும், கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள லாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், 'தனியார் மருத்துவமனைகள், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம். விநியோகத்தில் 50 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம்' என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், மாநில அரசு மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி விநியோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) தமிழ்நாடு கிளை செயலர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார் கூறியதாவது:

இதுவரை தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு மூலம் கரோனா தடுப்பூசிகள் கிடைத்துவந்தன. இந்நிலையில், கடந்த ஒருவாரமாக தனியார் மருத்துவமனை களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பது நின்றுபோயுள்ளது. தற்போது அரசுமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. அங்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், இரண்டாவது தடுப்பூசி வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இல்லை. எனவே, முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 2-வது தவணைக்கு அரசு மருத்துவமனைகளை நாடுமாறு தெரிவித்து வருகிறோம்.

அரசு தரப்பில் கேட்டதற்கு, 'தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளை அளிக்க மாட்டோம். நீங்களாகவே தடுப்பூசியைக் கொள்முதல் செய்துகொள்ளுங்கள். இது மத்திய அரசின் அறிவுறுத்தல்' என்று தெரிவித்துவிட்டனர். தடுப்பூசி உற்பத்தியாளர்களை தொடர்புகொண்டு கேட்டால், 'தற்போது அரசுக்கு மட்டுமே விநியோகம் செய்யுமாறு எங்களுக்கு உத்தரவு உள்ளது. தனியாருக்கு விநியோகிக்க உத்தரவு வரவில்லை. தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்டு அரசுக்கு மட்டுமே விநியோகிக்க முடியும்' என்கின்றனர். ஏற்கெனவே இருப்பில் உள்ள தடுப்பூசிகளை மட்டுமே தற்போது சில தனியார் மருத்துவமனைகளில் செலுத்தி வருகின்றனர்.

தடுப்பூசிகள், கரோனா சிகிச்சைக்கு பயன்படும் முக்கிய மருந்துகள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். வெளிச்சந்தையில் அவற்றை விற்பனை செய்ய அரசு அனுமதிக்கக் கூடாது. தடுப்பூசிகள், முக்கிய மருந்துகளுக்கு அரசே விலையை நிர்ணயித்து தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்க வேண்டும். வெளிச்சந்தையில் விற்க அனுமதித்தால் கள்ளச்சந்தை யில் இஷ்டம்போல் விற்பனை செய்ய வழி ஏற்படும். விலையும் அதிகரிக்கும். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்