தேர்தல் கருத்துக் கணிப்பில் உடன்பாடு இல்லை; ஆனால் திமுக கூட்டணியின் வெற்றி உறுதி: கார்த்தி சிதம்பரம் எம்.பி

By இ.ஜெகநாதன்

‘‘இந்தியா போன்ற பலதரப்பு மக்கள் வாழக்கூடிய நாடுகளில் கருத்துக் கணிப்பை ஏற்க முடியாது,’’ என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா போன்ற பலதரப்பு மக்கள் வாழக்கூடிய நாடுகளில் கருத்துக் கணிப்பை ஏற்க முடியாது. பொதுவாகவே அனைத்து கருத்து கணிப்புகளும் ஒரு திசையை நோக்கி தான் செல்கின்றன. எங்களுக்குப் பொதுவாகவே கருத்துக் கணிப்பு மீது நம்பிக்கையில்லை.

இருப்பினும், திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். அதை வெளியில் இருந்து ‘ஹேக்’ செய்ய முடியாது.

மத்திய பாஜக அரசு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வதில்லை. தவறான முடிவுகளால் வடமாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

முதல் அலையின்போது கால அவகாசம் கொடுத்து ஊரடங்கை முறையாக அறிவிப்பு செய்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. மேலும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு உலகத்திற்கே இந்திய அரசு தான் உதாரணம் என்பது போல் பெருமைப்படுத்திக் கொண்டார்கள். பாத்திரத்தை அடிக்கச் சொன்னார்கள், விளக்கை ஏற்றச் சொன்னார்கள்.

தற்போது 2-வது அலையின்போது அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு வழியைக் காணோம். தடுப்பூசிக்காக பணம் ஒதுக்கினோம் என்றார்கள். ஆனால் தற்போது விலை நிர்ணயிக்கிறார்கள். எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தினார்கள். அந்தப் பணம் எங்கே போனது என்று தெரியவில்லை. தேவையில்லாமல் ரூ.20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுகின்றனர்.

மேலும் நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உலக நாடுகள் வேகமாக தடுப்பூசி செலுத்தி வரும் வேளையில், நமது நாடு தடுமாறி கொண்டு இருக்கிறது. மத்திய அரசை நம்பி உங்கள் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம். பத்திரமாக இருங்கள்.

தமிழகம் தற்போது பாதிக்காமல் இருந்தாலும், வருங்காலங்களில் பாதிக்க வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டோர் அதிகரித்தால் சமாளிப்பது சிரமம்.

மேலும் அரசு கொடுக்கும் புள்ளி விவரங்களை என்னால் நம்ப முடியவில்லை. கரோனா பரவலுக்கு தேர்தல் பிரச்சாரம் காரணம் என்றால், அனைத்து கட்சிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் கும்பமேளாவும் ஒரு காரணம் தான். மேற்குவங்கத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக தான் 8 கட்டமாக தேர்தல் நடத்தினர். கரோனா வேகமாகப் பரவுகிறது என்று தெரிந்தும் 8 கட்டமாக நடத்தினர்.

மத்திய நிதியமைச்சர் கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் கோடிக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் ஒருவரை கூட வந்தடையவில்லை. இதனால் மத்திய அரசு அறிவிப்பை எல்லாம் நம்ப முடியாது. மேலும் தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும் கஜானா குறித்து ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டது.

ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் திறப்பதை தவறாக கூற முடியாது. அதேபோல் மற்ற நிறுவனங்கள் மூலமாகவும் ஆக்ஸிஜன் தயாரிப்பை அதிகப்படுத்த வேண்டும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE