அரசு அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணிபுரிய ஆணை வழங்கிடுக: அரசு ஊழியர் சங்கம்

By செய்திப்பிரிவு

அரசு அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணிபுரிய ஆணை வழங்கிட வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் இன்று (ஏப். 29) அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோருக்கு எழுதியுள்ள கடிதம்:

"கோவிட் - 19 எனப்படும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. ஏப். 27 வரை உலகம் முழுவதும் ஏறக்குறைய 15 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இந்தியாவில் மட்டும் 1 கோடியே 75 லட்சம் பேரும், தமிழகத்தில் 11 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் மொத்த பாதிப்பில் தலைநகர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 72 ஆகும். கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இச்சூழ்நிலையில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களையும் தொற்று வேகமாக பாதித்து வருகிறது. தமிழகத்தில் அரசுத்துறைகளில் சென்னையில் பணிபுரியும் தலைமைச் செயலக ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் அவர்தம் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்நோய்த் தொற்று பரவும் தீவிரத்தை உணர்த்தும் வகையில், சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் இத்தொற்று நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அலுவலகம் வந்து செல்ல நீண்ட தொலைவிலிருந்து வரக்கூடிய ஊழியர்களும், கூட்ட நெரிசலில் பயணம் மேற்கொள்ளக்கூடிய ஊழியர்களும், கரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய அபாயச் சூழ்நிலை உள்ளதாலும் மேலும் நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாலும் அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வரும் ஊழியர்களை கரோனா தொற்றின் தாக்கம் குறையும் வரை, 33 சதவீத அளவில் அனுமதித்தால், அது நோய்த்தொற்று பரவுவதை குறைப்பதுடன், போதிய பாதுகாப்புடன் அச்ச உணர்வின்றி அரசு ஊழியர்கள் அலுவலகம் வரவும், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கவும் ஏதுவாக இருக்கும் என்று தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

எனவே, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சென்ற ஆண்டு அறிவித்ததைபோல, இவ்வாண்டும் 33 சதவீதம் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரியும் வகையில் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு ஊசி மக்களுக்கு செலுத்தியும்கூட, கரோனா தொற்று இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்துவரும் சூழலில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

கரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைக்கு வழங்கக்கூடிய ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய ரெம்டெசிவிர் மருந்துக்கும் தட்டுப்பாடு எற்பட்டுள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் சிகிச்சைக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது.

எனவே, அரசு ஊழியர்களின் பாதுகாப்பு கருதியும், அரசு ஊழியர்களின் சேவை என்பதை முழுமையாக பொதுமக்களுக்கு அளிக்கும் வகையிலும், கீழே சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் எங்களது நியாயமான கோரிக்கைகளை உடனடி கவனம் செலுத்தி, உரிய உத்தரவுகளையும் ஆணைகளையும் பிறப்பிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் அதிதீவிர பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான பணிச்சூழலில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும், கரோனா தொற்றிலிருந்து ஊழியர்களை பாதுகாக்கும் வகையிலும், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களில், 33 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணிபுரிய ஆணை வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

2. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருந்தாளுநர்கள், ஊடுகதிர் நுட்புனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையில் ஈடுபடும் ஊழியர்கள் உள்ளிட்ட பிற துறை ஊழியர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு இறக்கும் தருவாயில் அவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர், இறந்த ஒரு சில குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை.

எனவே, கரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி இறந்த ஊழியர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கிட வேண்டும். அவர்தம் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என, மாநில அரசு அறிவித்ததை வரவேற்கும் அதே நேரத்தில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

இந்த தருணத்தில் ரூ.50 லட்சம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த ஊழியர்களுக்கு நாளது வரை உரிய நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

கரோனா நோய்தடுப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு மரணமடையும் அனைத்துத் தரப்பு அரசு ஊழியர்களுக்கும் இந்நிவாரணத் தொகையினை வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

3. மேலும் ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், ஜிங்க் மாத்திரைகள், மல்டி வைட்டமின்கள், கபசுர குடிநீர், (கோவிட் 19 ஆரோக்கிய பெட்டகம்) போதுமான அளவில் அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

4. கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

5. சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்கத்தொகை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

உயிர் காக்கும் சிகிச்சை பணிகளிலும் இரவு, பகல் பாராமல் கண்துஞ்சாமல் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்துவரும் அரசு ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்