முதுகுளத்தூர் அருகே சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதுகுளத்தூர் அருகே உள்ள கருங்கலக்குறிச்சி கண்மாய் பகுதியில் வாழவந்தாள் அம்மன் கோயில் எதிரில் பண்ணைக்குட்டை தோண்டியபோது அதிகளவில் பானை ஓடுகள் வெளிவந்ததாக அவ்வூரைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் உ.சண்முகநாதன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் அக்கண்மாய்ப் பகுதியில் ஆசிரியர் சண்முகநாதனுடன் இணைந்து கள மேற்பரப்பாய்வு செய்தபின் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

பண்ணைக்குட்டை தோண்டிய பகுதியில், ஒரு நுண்கற்காலக் கருவி, வழுவழுப்பான மற்றும் சொரசொரப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், தடித்த மற்றும் வழுவழுப்பான சிவப்பு நிற பானை ஓடுகள், தரையில் பதிக்கப்படும் சுடுமண் ஓடுகள், சுடுமண்ணால் ஆன விளக்குகள், குழாய், மூடிகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், துளையுள்ள பானை ஓடு, சிறிது உடைந்த சிவப்புநிற சிறிய குவளை, மான் கொம்பின் உடைந்த பகுதிகள், அரைப்புக் கல் மற்றும் குழவி, பெரிய செங்கல், குறியீடுகளுள்ள இரு பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் மற்றும் பண்ணைக்குட்டை பகுதிகளில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட பழம் பொருட்களைக் கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு ஊர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது.

இங்கு கிடைத்த ஒரு முழு செங்கலின் நீளம் 29 செ.மீ., அகலம் 15 செ.மீ., உயரம் 7 செ.மீ. ஆகும். இது கி.பி.1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககால செங்கல் அளவில் உள்ளது. இதேபோன்ற செங்கல் கமுதி அருகே பேரையூரிலும் கிடைத்துள்ளது. இரு கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் ஆங்கில எழுத்துகளான ‘E, H’ போன்ற குறியீடுகள் உள்ளன. இதில் ‘E’ போன்ற குறியீடு அழகன்குளம் அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரைப்புக்கல் சிவப்பு நிற கல்லிலும், குழவி கருங்கல்லிலும் செய்யப்பட்டுள்ளது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட மானின் உடைந்த கொம்புகள் உள்துளையுடன் உள்ளன. பொதுவாக மான்களின் கொம்புகளைக் கொண்டு அவற்றை இரலை மான், உழை மான் என இரு வகையாகப் பிரிப்பர்.

இதில் இரலை மானின் கொம்புகள் உள்துளை இல்லாமல் உள்ளே கெட்டியாக இருக்கும். இதன் கொம்பில் கிளைகள் இருக்காது. இவற்றின் கொம்பு கீழே விழுந்து புதிய கொம்பு முளைக்காது.

ஆனால் உழை மானின் கொம்புகள் உள் துளையுடையவை. கீழே விழுந்து புதிய கொம்பு திரும்பவும் முளைக்கும். இவற்றின் கொம்புகளில் கிளைகள் உண்டு. கீழே விழுந்த உழை மானின் கொம்புகளை மருந்தாகப் பயன்படுத்துவர். கெட்டியான இரலை மானின் கொம்புகளை ஆயுதமாகப் பயன்படுத்துவர்.

இவ்வூரில் கிடைத்த உள்துளையுடன் உள்ள கொம்புகளைக் கொண்டு இவை உழை எனும் புள்ளிமானின் கொம்புகள் என்பது உறுதியாகிறது. மேலும் இவ்வூருக்கு அருகில் இம்மானின் பெயரில் உழையூர் என்ற ஒரு ஊர் உள்ளது. மேலக்கொடுமலூர் கோயில் கல்வெட்டில் வடதலைச் செம்பிநாட்டு உழையூர் என்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் உத்தரகோசமங்கை அருகில் உள்ள கீழச்சீத்தை என்ற ஊரில் மேற்பரப்பாய்வில் கண்டெடுக்கப்பட்ட மான் கொம்புகள் உள்துளை இல்லாதவை. எனவே அவை இரலை மானின் கொம்புகள் என்பதை அறியமுடிகிறது.

இரலை மானை புல்வாய் எனவும் அழைப்பர். அம்மானின் பெயரில் கமுதி அருகில் புல்வாய்க்குளம் என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்