முகவர்கள் இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், பிபிஇ உடை அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆகியோருக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. இன்று (ஏப். 29) அனுப்பியுள்ள மனு விவரம்:
"1. 24.04.2021 தேதியிட்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் கடிதத்தில், கோவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டியன என கீழ்க்கண்டவற்றைத் தெரிவித்திருந்தார்.
அதில், '* வாக்கு எண்ணுபவர் / கட்சி முகவர் ஆகியோர், வாக்கு எண்ணும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கோவிட் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் எனப் பரிசோதனை முடிவு வைத்திருக்க வேண்டும். இந்தப் பரிசோதனையை முகவர் ஐ.சி.எம்.ஆர் அனுமதி பெற்ற எந்த மையத்திலும் அவரவர் வசதிக்கேற்ப மேற்கொள்ளலாம். மாவட்டத் தேர்தல் அதிகாரி இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வார்.
* வாக்கு எண்ணுபவர் / கட்சி முகவர் கோவிட் - 19 தடுப்பூசி முதல் தவணையாவது கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2. ஆனால், 28.04.2021 தேதியிட்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் முகவர்களுக்காகப் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதில், 'ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாத, கோவிட் - 19 தடுப்பூசி இரு தவணைகளும் செலுத்தப்படாத எந்தவொரு வேட்பாளர் / கட்சி முகவர் வாக்கு எண்ணும் அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக, கரோனா நெகட்டிவ் ரிப்போர்ட்டையும், இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான ரிப்போர்ட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் / முகவர்களுக்கான ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் இவற்றுக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தேர்தல் அதிகாரி மேற்கொள்வார். வாக்கு எண்ணும் 3 நாட்களுக்கு முன்னதாக, வேட்பாளர்களால் முகவர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெயர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இரு அதிகாரிகளாலும் வெளியிடப்பட்ட இந்த விதிமுறைகள் முரண்பாடுகளைக் கொண்டதாக உள்ளன. முதல் கடிதத்தில், 72 மணி நேரத்துக்கு முன்னதாக கட்சி முகவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் பரிசோதனை முடிவை வைத்திருக்க வேண்டும், கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இரண்டாவது கடிதத்தில் வாக்கு எண்ணும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு ரிப்போர்ட் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு டோஸ் கரோனா தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகவர்கள் பிபிஇ கிட் அணிந்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
4. இதனை நடைமுறைப்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளன.
* கரோனா பரிசோதனையை வாக்கு எண்ணும் 72 மணி நேரத்துக்கு முன்னதாகவா அல்லது 48 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்க வேண்டுமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
* முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தினால் போதுமா, அல்லது இரு தவணைகளும் செலுத்த வேண்டுமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. முதல் டோஸ் செலுத்திய பிறகு 4 முதல் 8 வாரங்களுக்குக் காத்திருக்க வேண்டும் என்பதால், இரண்டாவது டோஸ் செலுத்துவது சாத்தியமில்லை. மேலும், புறநகர்ப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதில் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், வேட்பாளர்கள் இரு டோஸ் செலுத்துவதென்பது சாத்தியமில்லாதது.
5. முகவர்கள் பிபிஇ கவச உடை அணிந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 14-16 மணி நேரத்துக்கு வெயில் காலத்தில் பிபிஇ கிட் அணிவது சாத்தியமில்லாதது. ஒருவரால் 6 மணி நேரத்துக்கு மேல் பிபிஇ கிட் அணிந்திருக்கக் கூடாது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கோவிட் பரிசோதனை மேற்கொள்ளும் லேப் டெக்னீசியன்களே பிபிஇ அணிவது முக்கியம் என உலக சுகாதார மையம், மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முகக்கவசம், சானிடைசர் மூலம் கை கழுவுதல், கையுறை அணிவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய முடியும். அதனால், பிபிஇ உடை அணிவது நடைமுறைப்படியும் மருத்துவ ரீதியாகவும் ஏற்றதல்ல.
6. தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்காக எங்கள் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களை வாக்கு எண்ணும் பணியின்போது பாதுகாப்பாக வைத்திருப்பதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை எங்கள் கட்சி மிகக் கடுமையாகப் பின்பற்றுகிறது.
எனவே, ஒரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தினால் போதுமானது என உத்தரவிட வேண்டும். பிபிஇ கிட் அணிவது குறித்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்".
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago