அறிவியல் தொழில்நுட்பங்களை மதிக்க வேண்டும், ரூ.2 லட்சம் அபராதத் தொகையை தடுப்பூசி திட்டத்துக்கு அளிக்க வேண்டும், புரளி கிளப்பக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். மறுநாள் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
விவேக்கைப் பார்க்க வந்து மருத்துவமனை வாசலில் இருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், அரசுக்கும், மருத்துவ அறிவியலுக்கும் எதிராக அவதூறுச் செய்திகளைத் தெரிவித்தார். பொதுமக்களிடையே கரோனா பெருந்தொற்று இல்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றி வருவதாக அவர் கூறினார். யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும், இதயத்தில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவேக் தடுப்பூசி காரணமாகத்தான் இந்த நிலைமைக்குச் சென்றார் என்றும் மன்சூர் அலிகான் பேட்டியில் தெரிவித்தார்.
மன்சூர் அலிகானின் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் 10-வது மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
IPC 153 (கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல்), 270 (தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல்), 505 (1),(b) (சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல்), தொற்றுநோய் தடுப்புச் சட்டம் (Section 3 of Epidemic Deceased Act - 1897), பேரிடர் மேலாண்மைச் சட்டம் (Section 54 of the Disaster Management t Act - 2005) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தான் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. பின்னர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், “எனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாகப் புரிந்துகொண்டார். உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை. எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, கரோனா தடுப்பூசி செலுத்துவதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை” எனக் குறிப்பிட்டார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தனி நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கினார்.
''கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களின் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். தடுப்பூசி குறித்து புரளி பரப்பக் கூடாது. பதற்ற நிலையை உருவாக்கக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்'' என்று அறிவுறுத்திய நீதிபதி, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அபராதத் தொகையை தடுப்பூசி வாங்குவதற்காக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பெயரில் வரைவோலையாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago