மதுரையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் மருத்துவமனைகள் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்படும்: சு.வெங்கடேசன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை 15,000 அளவுக்கு உயர்த்த வேண்டும், மதுரை கோவிட் கால நெருக்கடியை மிகச் சரியாக கையாண்டு மீண்டது என்ற நிலையை உருவாக்க அனைத்துத் தரப்பினரின் முழு ஒத்துழைப்பும், செயல்பாடும் தேவை. அதற்கு மாவட்ட நிர்வாகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:

“கோவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் வரப்போகும் நாள்களில் மதுரையின் நிலை என்னவாக இருக்கப்போகிறது என்பதைச் சிந்தித்து மாவட்ட நிர்வாகம் கூடுதல் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஏப்ரல் 28ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்ப்போமேயானால் தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1068, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1047, வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1105 ஆகும்.

கடந்த பத்து நாட்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அடுத்த பத்து நாட்கள் எப்படி இருக்கும் எனக் கணித்தோமேயானால் மே 5ஆம் தேதியுடன் தனியார் மருத்துவமனையின் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிடும். மே 9 அல்லது 10ஆம் தேதியோடு அரசு மருத்துவமனையின் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிடும் சூழல் உள்ளது.

நிலைமையைக் கைமீறவிடாமல் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் நாம் முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக மாவட்ட நிர்வாகம் கோவிட் பரிசோதனைகளை அதிகப்படுத்துவது அடிப்படையான பணி. அவற்றில் போதிய அளவு முன்னேற்றமில்லை. நமக்கு ஈடான மக்கள்தொகையைக் கொண்ட கோவை மாவட்டத்தில் தினசரி பரிசோதனை அளவு 10 ஆயிரமாக இருக்கிறது. ஆனால், நாம் இன்னும் 7 ஆயிரத்திலேயே இருக்கின்றோம்.

தொற்றாளர்களை அதிகமாகவும் விரைவாகவும் கண்டறிந்து மருத்துவ நடவடிக்கைக்கு உட்படுத்துவதுதான் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான அடிப்படைப் பணி. எனவே மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் உடனடியாக தினசரி பரிசோதனையின் அளவை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

அதேபோல மதுரையில் இயங்கும் அனைத்து வகையான சந்தைகளிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ஒழுங்கமைக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் நிர்வாகிகளிடம் பேசி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, அரசு சொல்லியிருக்கும் அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கத் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும்.

மதுரை கோவிட் கால நெருக்கடியை மிகச்சரியாக கையாண்டு மீண்டது என்ற நிலையை உருவாக்க அனைத்துத் தரப்பினரின் முழு ஒத்துழைப்பும், செயல்பாடும் தேவை. அதற்கு மாவட்ட நிர்வாகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்”.

இவ்வாறு சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்