100-வது பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர் ஆர்.பத்மாவதி, தன்னுடைய 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவர், தனது குடும்பத்தினர் அனைவருடனும் இந்த விழாவைக் கொண்டாட முடியவில்லை.

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் ஆர்.பத்மாவதி. இவர் 27.4.1921-ம் ஆண்டு பிறந்தார். 1950-ம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் முதல் பெண் மருத்துவராகப் பணியில் சேர்ந்த பெருமைக்குரியவர். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள், 8 பேரக் குழந்தைகள், நான்கு கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். தற்போது மூத்த மகனும், மருத்துவருமான டாக்டர் ஆர்.குருசுந்தருடன் வசித்து வருகிறார். மற்ற மகன்கள், மகள் சென்னையில் வசிக்கின்றனர்.

பத்மாவதி தன்னுடைய 100-வது பிறந்த நாளைத் தனது குழந்தைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாட திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால் அவர்களுடன் இணைந்து கொண்டாட முடியவில்லை. வீட்டில் 27-ம் தேதி ‘கேக்’ வெட்டி எளிமையாகக் கொண்டாடினார்.

பத்மாவதி, மதுரை மருத்துவக் கல்லூரியில் 1949-ம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்துள்ளார். படித்து முடித்ததும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பணி கிடைத்தது. பின் அங்கிருந்து மதுரைக்கு இடமாறுதலாகி அப்போதைய மதுரை நகராட்சி மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.

மகப்பேறு மருத்துவராக எண்ணிலடங்கா பிரசவங்கள் பார்த்து பணிக்காலத்தில் பாராட்டுகளைப் பெற்றவர். மாநகராட்சி மருத்துவமனை கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று தற்போது மதுரையில் அனைத்துப் பகுதிகளிலும் மாநகராட்சி மருத்துவமனைகள் இருப்பதற்கு அடித்தளமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர்.

இதுகுறித்து பத்மாவதியின் மூத்த மகன் டாக்டர் ஆர்.குருசுந்தர் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சி மருத்துவமனை கண்காணிப்பாளராக என் தாய் பணிபுரிந்தபோது ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவமனை வர வேண்டும் என்பதற்காக தொடக்கக் கால முயற்சிகள் எடுத்தார்.

100 வயதானாலும் நல்ல ஆரோக்கியமாகவும், தெளிவான பார்வையுடனும் உள்ளார். தற்போது கூட சிக்கலான பிரசவங்களுக்கு மகப்பேறு மருத்துவரான என்னுடைய மனைவி அவரிடம்தான் ஆலோசனை கேட்பார். அப்படி அவரிடம் ஆலோசனை கேட்டுப் பல சிக்கலான பிரசவங்கள், சுகப் பிரசவங்கள் நடந்துள்ளன.

இந்த வயதிலும் அவர் நேரத்திற்குச் சாப்பிடுவார். காலை 8.30 மணிக்கு டிபன், மதியம் 12.30 மணிக்குச் சாப்பாடு, இரவு 7.30 மணிக்கு டிபன் சாப்பிடுவார். அவருக்கென்று நாங்கள் பிரத்யேக சாப்பாடு தயார் செய்து வழங்குவதில்லை. நாங்கள் சாப்பிடும் சாதாரண சாப்பாடுதான் சாப்பிடுகிறார். இதுதான் அவரது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணம் என்று நினைக்கிறோம். காந்தி மீது அதிக ஈடுபாடு கொண்டவர். டிவி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது அவரது தற்போதைய பொழுதுபோக்கு.

அவர் மாநகராட்சி மருத்துவமனையில் பணிபுரிந்த 1969ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம், இந்தியாவில் இருந்து 3 மருத்துவர்களைத் தேர்வு செய்து போலந்து நாட்டில் நடந்த சர்வதேச மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலக் கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.

அதில் என் தாய் பத்மாவதியும் ஒருவர். எங்கள் குடும்பங்களில் ஆரம்பக் காலத்தில் பெண்கள் பெரிய படிப்பு படிப்பது கிடையாது. என்னுடைய தாத்தா மருத்துவர். அவர் மருத்துவராகப் பணிபுரிந்த காலத்தில் பெண்கள், அவர்கள் பிரச்சினைகளுக்கு ஆண் மருத்துவர்களிடம் செல்லத் தயக்கம் இருந்தது. கஷ்டப்பட்டாலும் சிகிச்சைக்கே வரவேமாட்டார்களாம்.

பெண் மருத்துவர்கள் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் என்னுடைய தாத்தா என்னுடைய தாயைக் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மருத்துவம் படிக்க வைத்தார். தற்போது நான், என் மனைவி, என் சகோதரி ஆகியோர் மருத்துவர்களாக உள்ளோம். மற்ற 2 சகோதாரர்கள் இன்ஜினீயராகவும், பட்டயக் கணக்காளராகவும் உள்ளனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்