ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழ்நிலையிலும் திறக்கப்படாது. அங்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாகத் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தைத் திறக்க மட்டுமே அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்கத் தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை 2018-ம் ஆண்டில் மூடியதே தமிழக அரசுதான். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது தமிழக அரசு தொடர்ந்து வாதங்களை முன்வைத்ததால், ஆலையைத் தமிழக அரசு மூடியது சரிதான் என உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு தொடர்ந்து வாதங்களை முன்வைத்து வருகிறது. ஆலையை ஏன் மூடினோம் என்பதற்கான சான்றுகளையும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த பிரதான வழக்குக்கும், தற்போதைய ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்திருப்பதற்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.
தற்போது நாட்டில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், தேசிய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமே மின்சாரம் வழங்கப்படும். ஆலை வளாகத்தில் உள்ள அனல்மின் நிலையம் இயக்கப்படாது என்பதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
எனவே, இது ஸ்டெர்லைட் ஆலை திறப்பு கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறந்து, அதில் வரும் ஆக்சிஜனை கரோனா நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்துவதற்குத்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. அதுவும் நான்கு மாதங்களுக்கு மட்டும்தான்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு கரோனா இல்லாத நிலை ஏற்பட்டால் ஆக்சிஜன் உற்பத்தி நிலையமும் மூடப்படும். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இதுதான் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு நகல் கிடைத்ததும், அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்''.
இவ்வாறு தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago