நெல்லையில் புதிய உச்சம்: ஒரே நாளில் 826 பேருக்கு கரோனா; மகேந்திரகிரியில் ஆக்சிஜன் தயாரிப்பு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 826 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தொடங்கியதில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்தில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை 500 என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 826 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும் 413 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம், மானூர்- தலா 48, நாங்குநேரி- 28, பாளையங்கோட்டை- 113, பாப்பாகுடி- 16, ராதாபுரம்- 47, வள்ளியூர்- 68, சேரன்மகாதேவி- 28, களக்காடு- 17.

மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ மையத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு:

தமிழகம் முழுவதும் கரோனா 2வது அலை வேகமாகப் பரவி வருவதால், நெல்லை மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ மையத்தில் மருத்துவரீதியான பயன்பாட்டுக்கு ஆக்ஸிஜன் தயாரிப்பு தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரியில் ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகம் இயங்குகிறது.

இந்த மையத்தில் இந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் இயந்திரம் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் இயந்திரங்களை இயக்கி வெள்ளோட்டமும் இங்கு நடத்தப்படுகிறது.

மேலும் கிரையோஜெனிக் இயந்திரங்களுக்கான எரிபொருள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரம்மாண்டமான ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் கொண்ட உற்பத்தி கூடம் இங்கு அமைந்துள்ளது. ராக்கெட் எரிபொருள்களுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் மருத்துவ ரீதியான பயன்பாட்டுக்கு ஆக்ஸிஜன் தயாரிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

கரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருவதால் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த மையத்தில் இருந்து முதற்கட்டமாக 14 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக மருத்துவ சேவை கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனைக்கு 8 டன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 6 டன் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளதால் அண்டை மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பட்டதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE