புதுச்சேரி மதுக்கடைகள் மூடல்: கடலூர் கடைகளில் குவிந்த மதுப் பிரியர்கள்

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், புதுச்சேரியை ஒட்டிய கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் குவிந்தனர்.

புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மது, சாராயம், கள் என அனைத்துவிதமான மதுக்கடைகளையும் வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை முழுமையாக மூட கலால்துறை நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இந்த திடீர் அறிவிப்பை எதிர்பார்க்காத மதுப் பிரியர்கள் மதுவுக்குத் திண்டாடினர். இதனால் புதுச்சேரியை ஒட்டிய கடலூர் மாவட்டத்துக்குப் படையெடுத்தனர். இதன் காரணமாக அங்கு மதுபான விற்பனை அதிகரித்துள்ளது.

குறிப்பாகக் கடலூர் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் மதுப் பிரியர்கள் காத்திருந்து மதுவை வாங்கிச் செல்கின்றனர். அங்கு சுமார் 300 மீட்டர் தூரம் வரை தடுப்புக்கட்டை அமைக்கப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற எதையும் பின்பற்றாமல் மதுப் பிரியர்கள் மதுவை வாங்கினர். அவர்களைக் காவல்துறையினர் ஒழுங்குபடுத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் புதுச்சேரிக்கு மது வாங்க வருவது உண்டு. ஆனால், தற்போது புதுச்சேரியில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மதுப் பிரியர்கள் கரோனா பாதிப்பையும் பொருட்படுத்தாமல் கடலூருக்குக் கூட்டமாகச் சென்றனர். இதனால் கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE