சிவகங்கை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை ஸ்கேன் எடுக்க காத்திருந்த அமைச்சர்: 9 ஆண்டுகளாக போக்கு காட்டும் மின்வாரியம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் மின்தடையால் அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஸ்கேன் எடுக்க காத்திருந்தார்.

இம்மருத்துவமனை 2012-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கரோனா வார்டு அமைக் கப்பட்டுள்ளது. மருத்துவமனை மின் விநியோகத்துக்காக 2 மின் மாற்றிகள் (டிரான்பார்மர்கள்) உள்ளன. மேலும் மின்தடையைச் சமாளிக்க 3 ஜெனரேட்டர்கள் உள்ளன.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும் கரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பைக் கண்டறியும் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன், அறுவைச் சிகிச்சை பிரிவு கருவிகள் போன்றவை உயர் மின்னழுத்தத்திலேயே இயங்கும். இவை ஜெனரேட்டர் மின்சாரத்தில் இயங்காது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு, தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

இதற்காக துணை மின் நிலையத்தில் இருந்து தனி பீடர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கி 9 ஆண்டுகளாகியும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இரு நாட்களுக்கு முன்பு சிவகங்கை பகுதியில் திடீரென அரை மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இத னால் சிடி ஸ்கேன் எடுக்க முடி யாமல் அமைச்சர் ஜி.பாஸ்கரன் உட்பட பலரும் காத்திருந்தனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரைக்கு கொண்டு சென்றனர். ஏற்கெனவே இம்மருத்துவமனையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் டார்ச்லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது 24 மணி நேரமும் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதன் பிறகும் அலட்சியமாக உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘ தனி பீடர் அமைப்பதை ஆய்வு செய்ய மின்வாரியத்துக்கு காப்புத்தொகை செலுத்தினோம். ஆனால் மின் வாரியத்தினர் தாமதப்படுத்தி வருகின்றனர்,’ என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘மருத்துவக் கல்லூரிக்கு மின் நுகர்வு 380 கேவிஏவாக உள்ளது. இருந்த போதிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ப தால், தனி பீடர் கேட்டு தலைமைப் பொறி யாளர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதினோம். ஆனால் 2,850 கேவிஏ மின் நுகர்வுக்கு மேல் இருந்தால் மட்டுமே, தனி பீடர் மூலம் இணைப்பு கொடுக்க முடியும் எனத் தெரிவித்துவிட்டனர். ஆனாலும், 24 மணி நேரமும் தடை யின்றி மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒருசில சமயங்களில் எதிர்பாராத விதமாக மின்தடை ஏற்படுகிறது,’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE