வாணியம்பாடி ராமைய்யன் பாலாற்றுப் பகுதியில் மணல் கொள்ளையர்களால் குடிநீர் குழாய்கள் அடிக்கடி சேதமடைவதாகவும், அதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி வருவதாகவும், மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர் பகுதிகளில் பாலாற்றின் பெரும் பகுதி விரிந்துள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டியதாலும், பாலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எதிர்பார்த்த மழை பெய்யாததாலும் கடந்த பல ஆண்டுகளாகப் பாலாறு வறண்டு காணப்படுகிறது.
வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் இரண்டாகப் பிரியும் பாலாறு, கிழக்கு நோக்கி பெரியபேட்டை வழியாக ராமைய்யன்தோப்பு பாரத கோயில் அருகேயுள்ள கிளை பாலாற்றில் சேருகிறது. அதேபோல, நாட்றாம்பள்ளி கல்லாற்றில் இருந்து வரும் தண்ணீரும், ஏலகிரி மலை கன்னாற்றில் இருந்து வரும் தண்ணீரும் ராமைய்யன் தோப்பு பாரதகோயில் அருகே ஒன்றாகக் கலக்கிறது.
இந்த 3 ஆறுகள் சேரும் இடத்தை வாணியம்பாடி பகுதி மக்கள் ‘சின்ன பாலாறு’ என அழைக்கின்றனர். இங்கிருந்து செல்லும் தண்ணீர் வாணியம்பாடியின் மையப்பகுதியாக விளங்கும் வளையாம்பட்டு பிரதான பாலாற்றுக்குச் சென்று சேருகிறது. பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காலத்தில் வாணியம்பாடி பகுதியை ஒட்டியுள்ள பாலாற்றுப் பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நகராட்சி சார்பில் ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.
» பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் (ஏப்ரல் 26 முதல் மே 2ம் தேதி வரை)
» கும்பகோணத்தில் ட்ரோன் மூலம் உரம், பூச்சிக்கொல்லி தெளிக்கும் விவசாயி
வாணியம்பாடி பெரியபேட்டை வடக்குப் பக்கமாக உள்ள பாலாற்றுப் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மிகப்பெரிய ஆழ்துளைக் கிணறு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கிருந்து உறுஞ்சப்படும் தண்ணீர் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கரிமாபாத், ஜாப்ராபாத், சிட்டிகாபாத் மற்றும் பெரியபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. இது மட்டுமின்றி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
அதேபோல, பாலாற்றின் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் பல லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் ஒரு காலத்தில் உறுஞ்சப்பட்டுப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாலும், பாலாற்றில் மணல் கொள்ளையால் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் தண்ணீர் எடுப்பது படிப்படியாகக் குறைந்துவிட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், வாணியம்பாடி பாலாற்றுப் பகுதியில் மணல் கொள்ளையைத் தடுக்க முடியாத காரணத்தினால் எஞ்சியுள்ள குடிநீர் குழாய்களும் தற்போது ஒவ்வொன்றாகச் சேதமடைந்து குடிநீர் வீணாகி வருவதாகவும், கோடை காலத்தில் வாணியம்பாடி மட்டும் அல்ல பல்வேறு பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘வாணியம்பாடி ராமைய்யன் தோப்பு பாலாற்றில் 5 அடியில் தோண்டப்பட்ட மணல் திருட்டு தற்போது 60 அடி வரை சுரண்டி எடுக்கப்படுகிறது. மணல் கொள்ளையர்களால் பாலாற்றின் அடையாளம் அழிவின் விளம்பில் சென்றுவிட்டது.
இது மட்டுமின்றி பாலாற்றில் ஆக்கிரமிப்புகளும் தற்போது அதிகரித்துள்ளன. கொடையாஞ்சி பகுதியில் தற்போது 15 அடி கால்வாயாகப் பாலாறு மாறிவிட்டது. பாலாற்றின் சில பகுதிகளில் குடியிருப்பும் வந்துவிட்டது.
கடந்த அரை நூற்றாண்டாக மணல் கொள்ளை தங்கு தடையின்றி நடக்கிறது. மணல் கொள்ளையில் பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே ஈடுபடுவதால் வருவாய்த் துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை என அனைத்துத் துறையினரும் மணல் திருட்டைத் தடுக்க முன்வருவதில்லை. ‘கை புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு’ என்ற சொல்லுக்கு ஏற்ப பாலாற்றில் மணல் கொள்ளை நடப்பது தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுகின்றனர். தட்டிக் கேட்கும் ஒருசில அதிகாரிகளையும் மணல் கொள்ளையர்கள் மிரட்டுகின்றனர். இதனால் அரசு அதிகாரிகள் செய்வதறியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
பெருகி வரும் மணல் கொள்ளையாலும், பல ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பாலாறு தன் அடையாளத்தை இழந்துவிட்டது என்றே கூறலாம். 1903-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பாலாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 200 பேர் உயிரிழந்தனர். தற்போது பாலாற்றின் நிலையைக் கண்டால் மீண்டும் ஒரு முறை பெரும் வெள்ளம் வந்தால் இந்த முறை பெரிய அளவிலான விபரீதத்தை வாணியம்பாடி மக்கள் சந்திக்க நேரிடும்.
எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க பாலாற்றை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளையர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து குடிநீர் தடையின்றிக் கிடைக்க ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் கூறுகையில், ‘‘மணல் கொள்ளையால் குடிநீர் குழாய் சேதமடைந்த தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களில் வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று அங்கு உடைந்த குடிநீரைச் சரி செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் மணல் கொள்ளையர் நுழையாத வகையில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மணல் கொள்ளையர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்யவும், தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுவோர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மணல் திருட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கட்டிடப் பணிகளுக்கு ‘எம்-சாண்ட்’ பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். தற்போது கட்டப்பட்டு வரும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு எம்-சாண்ட் பயன்படுத்தப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து எம்-சாண்ட் கொண்டு வரப்படுகிறது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டிடப் பணிகளுக்கு எம்-சாண்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை தொடங்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago