தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எந்தச் சூழ்நிலையிலும் திறக்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று திடீர் மறியலில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்கி ஆக்சிஜன் உற்பத்தி செய்து, இலவசமாக வழங்க அனுமதி வழங்கக் கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
» பிரசவித்த பெண்ணை வீல் சேரிலிருந்து கீழே தள்ளிய ஊழியர்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» நீலகிரி அணைகள் நீர்மட்டம் சரிவு: மின் உற்பத்திக்கு சிக்கல்
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவு செய்வதற்காக சென்னையில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய 4 மாதங்களுக்கு தற்காலிகமாக அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்பாளர்கள் மனு:
இந்நிலையில் எந்தச் சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக்கூடாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபு, மகேஷ் உள்ளிட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனு விவரம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து நிரந்தரமாக மூடியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது சரியே என சென்னை உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. தற்போது ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் சூழ்ச்சியோடு புறவாசல் வழியாக ஆலையை திறக்க ஸ்டெர்லைட் நிறுவனம் முயன்று வருகிறது.
வேதாந்தா குழுமம் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 6 தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் கட்டாயம் இருக்கும். அவைகள் மூலம் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அந்நிறுவனம் முன்வர வேண்டும். இந்த ஆலைகள் அனைத்தும் வடமாநிலங்களில் இருப்பதால் பயண தொலைவும் குறைவு. ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் உள்ள வடமாநிலங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும். எனவே, அந்த ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிப்பது தான் எளிது மட்டுமல்ல சிறந்ததும் ஆகும்.
எந்தச் சூழ்நிலையிலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. மக்களின் இந்த கருத்தை மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் தெரிவிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் மறியல்:
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு நின்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட அவர்கள், திடீரென அந்தப் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமுர்த்தி தலைமையிலான 10 பேரை போலீஸார் கைது செய்து, அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பலத்த பாதுகாப்பு:
இந்த விவகாரத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்துக்கு 4 அடுக்கு போடப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக வாசல், பிரதான நுழைவு வாயில், ஆர்டிஓ அலுவலக சாலை சந்திப்பு, தேசிய நெடுஞ்சாலை அருகே என நான்கு இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தண்ணீரை பீச்சியடிக்கும் வாகனம், புகைக்குண்டுகள் வீசும் வாகனம், தீயணைப்பு வாகனம் போன்றவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு வெளியேவும் சுமார் 100 போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி டிஐஜி பிரவின்குமார் அபிநபு தலைமையில் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், தென்காசி எஸ்பி சுகுணாசிங் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago